நடிகைகள் தனுஸ்ரீ தத்தா, கங்கனா ரனாவத், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் மீ டூ ஹேஷ்டேக் மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக தெரிவித்து வருகின் றனர். இந்த விவகாரத்தில் ‘காலா’ பட வில்லன் நடிகர் நானா படேகர் மீது தனு தத்தா மும்பை போலீசில் புகார் கூறி உள்ளார். பல நடிகைகள் மீ டூ இயக்கத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். நடிகை சமந்தாவும் ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து இணைய தள டுவிட்டர் பக்கத்தில் சமந்தா கருத்து பகிர்ந்து வருகிறார். அவரிடம் ரசிகர்கள் சிலர் கேள்விகள் கேட்டுள்ளனர். அதற்கு நறுக்கான பதில் தெரிவித்திருக்கிறார்.
‘பத்து ஆண்டு அல்லது அதற்கு முன்பு நடந்த பாலியல் தொல்லை சம்பவத்தை நடிகைகளும் இப்போது வெளிப்படுத்துவதற்கு என்ன தேவையிருக்கிறது’ என ஒருவர் கேட்டதற்கு பதில் அளித்துள்ள சமந்தா,’ஏனென்றால், இதுபோல் கேள்விகள் கேட்பார்கள் என்பதற்காகத்தான் உண்மையிலேயே நாங்கள் பயந்திருந்தோம். அதுதான் தவறாகிவிட்டது’ என்றார்.
மற்றொருவர் கேட்கும்போது,’எனது மகன் என்னிடம் வந்து மீ டு என்றால் என்னப்பா என்று கேட்டான். அதற்கு பதில் அளித்த நான், ரிடையர்டு (ஓய்வுபெறும்போது)ஆகும்போது பெண்களுக்கான இன்சூரன்ஸ் திட்டம் என பதில் அளித்தேன்’ என்றார். அதற்கு பதிலடி அளித்திருக்கும் சமந்தா, ‘மகனிடம் இதுபோல் பதில் சொன்ன நீங்கள் உங்கள் மகளிடம் என்ன பதில் கூறுவீர்கள்’ என நறுக்கு தெறிக்க பதில்கேள்வி கேட்டு வாயடைக்கச் செய்திருக்கிறார்.