வைன் உற்பத்தியில் உலகத்தில் ஈடு இணையற்ற நாடு பிரான்ஸ் என்பதை மறுக்க வேண்டுமானால் யாராவது மூளை பிழைத்த ஆளைத்தான் தேடிப்பிடிக்க வேண்டும்.
பிரான்சசில் 1945ம் ஆண்டு வடிக்கப்பட்டு அடைக்கப்பட்ட இரண்டு வைன் போத்தல்கள் நியூயோர்க் ஏலத்தில் பெரிய விலைக்கு போயுள்ளன.
றொம்னி கொன்ரி என்ற இந்த வைன் போத்தலானது 1945ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது, வருடா வருடம் இதன் விலை உயர்வடைந்து செல்கிறது.
எதிர் பார்க்கப்பட்டதைவிட 17 மடங்கு அதிகவிலையில் ஏலம் விடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போத்தலும் ஏலத்திற்கு வந்தது அதன் விலை 4,96,000 டாலர்களுக்கு போயுள்ளது. இது 3.1 மில்லியன் டேனிஸ் குறோணர்களாகும்.
ஏன் இவ்வளவு பெரிய விலைக்கு விற்கப்படுகிறது அதன் மகிமைதான் என்ன.. இந்த வைன் போத்தலிலேயே தனியுரிமை 1945 என்றுதான் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதாவது மற்றவர்களால் உற்பத்தி செய்யப்பட முடியாத தனித்துவம் கொண்டது.
மிகவும் பெறுமதியான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதி உயர் தரத்தில் தயாராகிறது இந்த வைன் போத்தல்கள். இவை நாட் செல்ல செல்ல பலம் கூடியவவையாக மாறிச் செல்லும் என்பதால், பழைய வைனுடைய பெறுமதி தங்கம் போல உயர்வடைந்து செல்லும் என்கிறார்கள்.
றொம்னி என்ற வைன் தயாரிப்பு நிறுவனம் அதிகமாக உற்பத்தி செய்வதில்லை வருடத்திற்கு 5000 லீட்டர்கள் மட்டுமே உற்பத்தி செய்கிறார்கள். ஏலத்திற்கு போன வைன் போத்தல் உருவாக்கப்பட்ட 1945ம் ஆண்டு 600 போத்தல்கள் மட்டுமே உருவாக்கப்பட்டிருந்தன.
இந்த வைன் போத்தல்கள் பெரும் பணக்காரர்களால் மட்டுமே பாவிக்கப்படுகிறது. புதிய வைன் போத்தல் ஒன்றின் விலை 60.000 டேனிஸ் குறோணர்களாகும். அதவது 15,60,000 இலங்கை ரூபாவாகும்.
இந்த விலையில் வேண்டி குடிப்பதானால் அதற்கேற்ற வருமானம் இருக்க வேண்டும். ஆனால் இதை பாவித்தால் தங்க பஸ்பம் சாப்பிடுவது போல உடலுக்கு நல்லது என்கிறார்கள்.
2010ம் ஆண்டு கொங்கொங்கில் இடம் பெற்ற ஏலத்தில் ஒரு வைன் போத்தல் 2,33,000 டாலர்களுக்கு விற்பனையானது இன்னொரு கதை.
இதனால் வைன் உடலுக்கு நல்லதென்ற கதை ஒன்று உலக அரங்கில் காற்றில் உலாவருவது போல உலாவித்திரிகிறது.
இதனால் உருவேறிய நோர்வே வாழ் திருடர்கள் சிலர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலைநகர் ஒஸ்லோவில் உள்ள இடமொன்றில் விலை கூடிய வைன் போத்தல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குள் நுழைந்து 62 வைன் போத்தல்களை களவாடி சென்றது இன்னொரு கதை.
இந்த போத்தல்கள் ஒவ்வொன்றும் தலா 1,40,000 குறோணர்களுக்கு வாங்கப்பட்டவையாகும்.
இப்படி வைன்கள் தொடர்பாக திட்டமிட்டது போல பரவ விடப்படும் கதைகளால் எடுபட்டு மலிவு விலை கொண்ட கலப்பட வைனைக் குடித்து, ஆகா இதுவல்லவோ உடலுக்கு நல்லதென கூறும் புலம் பெயர் தமிழரும், அட அல்டி வைன் வெறியேறவில்லை என்று அங்கும் இங்குமாக அலப்பாரிக்கும் பல அலாதியான கதைகள் உள்ளன.
அவ்வளவுடன் நின்றால் போதாதா.. வைன் உடம்புக்கு நல்லதென சில தமிழ் பெண்களும் வயின் அடித்து இப்போது வொட்கா விஸ்கியும் உடம்புக்கு நல்லதென்று கருதும் அளவுக்கு முன்னேறியிருப்பது இன்னொரு கூத்தென்று வானம்பாடியார் கவிதை ஒன்று முகநூலில் உலாப்போகிறது.
இருந்தாலும் சும்மா சொல்லக் கூடாது. வொட்கா விஸ்கியிலும் இந்த விலை கூடிய வைன் கூத்தாட்டம் போல ஒரு கூத்தாட்டம் இருக்கத்தான் செய்கிறது.
வைன் போத்தல்கள் போல மிகப்பழைய வொட்கா விஸ்கி போத்தல்களும் அதிக விலைக்கு ஏலம் போயுள்ளன. உலகத்தின் மிக அதிக விலை கொண்ட எட்டு மில்லியன் டேனிஸ் குறோணர்கள் பெறுமதியான வொட்கா விஸ்க்கி போத்தல் ஒன்று இந்த ஆண்டு ஆரம்பத்தில் டென்மார்க்கில் களவு போயுள்ளது.
இந்த வொட்கா விஸ்க்கிகளையோ அல்லது வைன்களையோ குடித்து சாகாதவரம் பெற்ற எவரையும் புவியில் காண முடியவில்லை.
ஆரோக்கியமாக வாழ வைன் குடியுங்கள் என்றால் ஆஸ்பத்திரிக்கு போய் எதற்கு மருந்தெடுக்க வேண்டும்.
டென்மார்க் போன்ற நாட்டுக்கு இவ்வளவு அளவுக்கு மீறிய வைத்தியத்துறை பட்ஜட் ஏன் போக வேண்டும்.
அமெரிக்கன் சந்திர மண்டலம் போனதே பொய்யென்று நேற்று மீண்டும் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதைவிட பிரான்சிய வைனின் சிறப்பு குறித்த கதைகள் ஒன்றும் பொய் போல தெரியவில்லையே.. என்கிறார் நமது சின்னக்குட்டியார்.
அலைகள் 14.10.2018 ஞாயிறு