2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் அப்போது முதல்வராக இருந்த மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு(எஸ்ஐடி) அளித்த அறிக்கை அப்பட்டமான பொய் என்று குஜராத் கலவரத்தை அடக்க அனுப்பப்பட்ட ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஜமீர் உதின் ஷா “தி சர்காரி முசல்மான்” என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதில் தன்னுடைய பதவிக்காலத்தில் சந்தித்த பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இதில் குஜராத் கலவரமும் முக்கியமானதாகும்.
இந்த தி சர்காரி முசல்மான் என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது. இந்தப் புத்தகத்தை முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ லெப்டினென்ட் ஜெனல் ஜமீர் உதின் ஷா பேசியதாவது:
நான் இந்தப் புத்தகத்தில் என்னுடைய காலத்தில் சந்தித்த பல்வேறு விஷயங்களையும், உண்மைகளையும் இதில் தெரிவித்திருக்கிறேன். குறிப்பாக 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தைக் கட்டுப்படுத்த 3 ஆயிரம் ராணுவத்தினருக்குத் தலைமை ஏற்றுச் சென்றேன். அகமதாபாத் விமானநிலையத்தில் மார்ச் 1-ம் தேதி காலை7மணிக்குத் தரையிறங்கிவிட்டோம்.
ஆனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பற்றி எரிந்துவரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த எங்களுக்கு எந்தவிதமான வாகனவசதியும் மாநில அரசு சார்பில் செய்து கொடுக்கப்படவில்லை. ஏறக்குறைய ஒருநாள் முழுவதும் அங்கு காத்திருந்தபின்புதான் எங்களுக்குப் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. அதற்குள் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் கலவரம் காட்டுத்தீ போல் பரவிவிட்டது.
மார்ச் 1-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு நான் அப்போது இருந்த முதல்வர் மோடியிடம் போக்குவரத்து வசதி செய்து கொடுங்கள் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முன்னிலையில் தெரிவித்தும் எங்களுக்குத் தாமதமாகவே கலவரம் நடந்த பகுதிகளுக்குச் செல்ல போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டன.
உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு குஜராத் கலவரத்தில் மோடிக்கு நற்சான்று அளித்தது. கூடுதல் உள்துறை தலைமைச்செயலாளர் அசோக் நாராயண் அறிக்கையின் அடிப்படையில் ராணுவம் குவிக்கப்பட்டதில் எந்தவிதமான தாமதமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
எஸ்ஐடி அறிக்கையில் என்னைப் பற்றி குறிப்பிடும்வரை, அது குறித்து எனக்கு ஏதும் தெரியாது. சில நாட்களுக்கு முன்தான் எனக்குத் தெரியும். எஸ்ஐடி அறிக்கை குறித்து மீண்டும் சொல்கிறேன், அது அப்பட்டமான பொய். நான் உண்மையைச் சொல்கிறேன். அது குறித்து பேசுவதற்கு என்னைக் காட்டிலும் சிறந்த நபர் வேறுயாராவது இருக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை.
இவ்வாறு முன்னாள் ராணுவ அதிகாரி ஷா தெரிவித்தார்.