தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்தது.
அரசாங்கத்தை அச்சுறுத்தி புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கும், சிறையில் உள்ள எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிப்பதாக பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அரசாங்கம் இம்மாத இறுதியில் புதிய அரசியலமைப்புக்கான அறிக்கையொன்றை முன்வைப்பதற்குத் தயாராகி வருகிறது. சர்வதேசத்துக்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற ஐ.நா மனித உரிமைகள் வழங்கிய கால அவகாசம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அரசாங்கம் அவசர அவசரமாக அரசியலமைப்புக்கான அறிக்கையை கொண்டுவர முயற்சிக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றை வழங்காவிட்டால் மீண்டும் யுத்தம் வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். மீண்டும் குண்டுகள் வெடிக்கும், மத ஸ்தலங்கள் மீது குண்டுகள் வீசப்படும் என அச்சுறுத்தி அரசியலமைப்பைக் கொண்டுவர முடியாது. இவ்வாறானதொரு அரசியலமைப்பை மக்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள் எனத் தெரிவித்தார். அவ்வாறு கொண்டுவரப்படும் அரசியலமைப்புக்கு தமது ஒத்துழைப்பு ஒருபோதும் கிடைக்காது என்றும் கூறினார்.
அதேநேரம், சிறையிலுள்ள எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களை விடுதலை செய்யாவிட்டால் வரவு செலவுத்திட்டத்தில் தமது 16 உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அச்சுறுத்தியுள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்னர் உடுவில் பிரதேசத்தில் ஆவா குழுவுக்கு நிதியளிக்கும் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள பின்னணியில் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களை விடுவிக்குமாறு கூட்டமைப்பினர் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இந்த அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.