இலங்கை அதிபர் சிறிசேனாவைக் கொலை செய்ய இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ (RAW) திட்டமிட்டது என்று வெளியான செய்தி தொடர்பாகப் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா நேற்று விளக்கம் அளித்தார்.
அப்போது, தன்னைக் கொல்வதற்கு இந்தியாவின் உளவு அமைப்பு ‘ரா’ சதித்திட்டம் தீட்டியிருந்தது என்ற செய்தி தவறானது, அடிப்படை ஆதாரமற்றது என்று பிரதமர் மோடியிடம் அதிபர் சிறிசேனா தெரிவித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசின் அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் பங்கேற்ற அதிபர் சிறிசேனா பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளார். அப்போது, தன்னைக் கொல்வதற்கு இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ திட்டமிட்டிருந்தது. ஆனால், இது பிரதமர் மோடிக்குத் தெரியாது என்று பகீர் குற்றச்சாட்டு வைத்தார் என்று தனியார் ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டது.
இது தொடர்பாக அந்த இணையதளத்துக்குப் பேட்டி அளித்த பெயர் வெளியிட விரும்பாத அமைச்சரும், இந்தியாவின் உளவு அமைப்பு அதிபர் மைத்திரிபால சிறிசேனாவைக் கொல்ல திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இலங்கையின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் இந்தியா சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. அவற்றை விரைந்து முடிக்கக் கோரியும், பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவும், இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக இன்று இந்தியா வர உள்ள நிலையில் இத்தகைய குற்றச்சாட்டு இரு நாட்டுஉறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, தன்னைக் கொல்ல ‘ரா’ அமைப்பு சதி செய்ததாகத் தான் கூறியதாக வெளியான செய்தி குறித்து விளக்கம் அளித்தார். ஏறக்குறைய இருவரும் 20 நிமிடங்கள் வரை தொலைபேசியில் பேசி, பல்வேறு விஷயங்களைத் தெளிவுபடுத்தினார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
’’இலங்கை அதிபரைக் கொல்ல இந்தியாவின் உளவு அமைப்பு ‘ரா’ சதித்திட்டம் தீட்டியிருந்ததாக எழுந்த செய்தியை இலங்கை அதிபர் சிறிசேனா திடமாக மறுத்துள்ளார். ஆதாரமில்லாத, விஷமத்தனமான, தவறான உள்நோக்கத்துடன் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இரு தலைவர்களுக்கும் இடையிலான சிறந்த நட்புறவில் விரிசலை ஏற்படுத்த வேண்டும், தவறான புரிதலை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று அதிபர் சிறிசேனா தெரிவித்தார்.
இலங்கையின் உண்மையான நண்பர் இந்தியப் பிரதமர் மோடி என்று புகழ்ந்த அதிபர் சிறிசேனா, இந்தியா, இலங்கை நட்புறவை நாங்கள் மிகுந்த மதிப்பு உடையதாகக் கருதுகிறோம். இரு நாடுகளுக்கு இடையிலானநட்புறவை வலிமைப்படுத்த பிரதமர் மோடியுடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறோம் என சிறிசேனா தெரிவித்துள்ளார்.
அதிபர் சிறிசேனாவின் வார்த்தைகளையும், விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, உரிய நேரத்தில் தெளிவான விளக்கத்தை விரைவாக அளித்தமைக்கு பாராட்டுக்களை சிறிசேனாவுக்கு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியா எப்போதும் அண்டை நாடுகளுடன் நெருக்கத்தை விரும்பும், இரு நாடுகளுக்கு இடையே எப்போதும் ஆழ்ந்த நட்புறவுக்கும், கூட்டுறவுக்கும் முக்கியத்துவம் அளிப்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்’’.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியா இலங்கை நட்புறவில் விரிசலை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் ஆதாரமில்லாத செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். இது மக்கள் மத்தியிலும் ஒருவிதமான பதற்றமான சூழலை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.