பெண்கள் தங்கள் மீது நடந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி மீடூ இயக்கம் மூலமாக இணைய தளத்தில் வெளிப்படையாக பேசி வருகின்றனர். நடிகைகள் பலர் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப் பட்டதுபற்றி கூறிவருவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூறியதாவது: பெண்கள் பாலியல் பலாத்காரம் அல்லது அவர்களை பாலியலுக்கு வற்புறுத்துதல் வேறு, பெண்களிடம் தவறாக நடப்பது வேறு, இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்கிறார்கள். இந்த பிரச்னையில் எது நடந்தது, எது நடக்கவில்லை என்பதை எப்படி பிரித்துப்பார்க்க முடியும். இதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக பெண்கள் இதுபோன்ற கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். அது நடக்க கூடாது. நிறைய சயம்பவங்கள் இதுபோல் நடப்பதால் அச்சம்பவங்கள் நீர்த்துபோகச் செய்யப்படுகின்றன. பெண்கள் தங்கள் குரலை வெளிப்படுத்த உதவியிருக்கும் சமூக வலைதளங்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். இம்முறை இதுபோன்ற பிரச்னைகள் நீர்த்துப்போகச் செய்யாமல் நிச்சயம் ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். மீடூ பெரிய அளவில் பேசப்பட்டு ஒரு இயக்கமாகியிருப்பது சந்தோஷம். இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலும் என்னைப்பொறுத்தவரை என் வாழ்க்கையில் நான் இதுபோன்ற பாலியல் தொல்லை எதையும் சந்தித்ததில்லை.
ஆனாலும் இதுபோன்ற தகவல்களை நான் கேட்டிருக்கிறேன். இந்தநேரத்தில் இதுபோன்ற பிரச்னைகளை மக்கள் தைரியமாக பொது வெளியில் பேசுகிறார்கள் என்பதற்காக சந்தோஷம். எனது ஒரே கோரிக்கை என்னவென்றால், பெண்களின் பிரச்னைகளை மக்கள் காதுகொடுத்து கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் பணி செய்யும் இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பார்கள். அதேசமயம் இந்த வாய்ப்பை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் கூறினார்.
Tags: