இந்தியாவில் ‘மீ டூ’ இயக்கம் பரபரப்பாகி வருகிறது. இந்தி நடிகைகள் பலர் பாலியல் துன்புறுத்தல்களை இதில் பகிர்ந்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் பாடகி சின்மயி, பெண் இயக்குனர் லீனா மணிமேகலை ஆகியோர் பாலியல் புகார் கூறியுள்ளனர். நடிகர் சித்தார்த் ‘மீ டூ’ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில் ‘மீ டூ’ வில் பாலியல் புகார் கூறிய சின்மயிக்கு பதில் அளித்து படவிழாவில் பேசிய நடிகர் ராதாரவி, ‘மீ டூ’ வில் சின்மயி போன்றவர்கள் பாலியல் குற்றங்களை பதிவிடுவது சினிமாவுக்கு அசிங்கம் என்றும், நமது கலாசாரத்துக்கு ‘மீ டூ’ இயக்கம் தேவையற்றது என்றும் கூறினார்.
ராதாரவி பேச்சை நடிகர் சித்தார்த் டுவிட்டரில் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
‘‘மீ டூ இயக்கம் படித்த மற்றும் பணவசதி கொண்ட பெண்களால் தொடங்கப்பட்டது என்று வில்லன் நடிகர்கள் கூறலாம். ஆனால் இந்த இயக்கம் தீவிரமான பிறகு எத்தனை பேர் தலைகள் உருளப்போகிறது என்பதை பார்க்கப் போகிறீர்கள். ஆண்டாண்டு காலமாக ஆணாதிக்கத்தை பின்பற்றி வந்ததால் இந்த நிலைமை வந்து இருக்கிறது. இனி அது மாறப்போகிறது.
தமிழ்நாட்டில் பெண்கள் மீது கைவைப்பது தவறு என்று பேசப்படும் நிலை வந்து இருக்கிறது. இந்த பயம் தொடர வேண்டும். பழைய பழக்க வழக்கங்கள் ஒழிய வேண்டும். ‘மீ டூ’ இயக்கம் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். இந்தியாவில் பெண் சிசு கொலையும், பெண்கள் வரதட்சணைக்காக கொல்லப்படும் நிலைமைகளும் இருந்தன. அப்போதுகூட ‘மீ டூ’வை போல் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பவில்லை.’’
இவ்வாறு சித்தார்த் கூறியுள்ளார்.