தான் நடித்துவரும் ‘பேட்ட’ படம் குறித்து ட்வீட் செய்துள்ளார் ரஜினிகாந்த்.
‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது.
ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, இயக்குநர் மகேந்திரன், சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
ஊட்டியை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தின் ஷூட்டிங், டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. ஹாஸ்டல் வார்டனாக இந்தப் படத்தில் நடிக்கிறார் ரஜினி.
வாரணாசியில் ‘பேட்ட’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் (அக்டோபர் 19) மொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், அதுகுறித்து ட்வீட் செய்துள்ளார் ரஜினிகாந்த்.
“பேட்ட படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. ஷெட்யூலுக்கு 15 நாட்கள் முன்பே முடிந்துவிட்டது. சன் பிக்சர்ஸ், கார்த்திக் சுப்பராஜ், திரு மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், எல்லோருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என ட்வீட்டில் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
வாரணாசியில் ‘பேட்ட’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் (அக்டோபர் 19) மொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்துள்ளது. இத்தனைக்கும் படக்குழு போட்ட ஷெட்யூல்படி நவம்பர் முதல் வாரத்தில்தான் படப்பிடிப்பு முடிய வேண்டுமாம்.
ஆனால், சொன்ன தேதியைவிட 15 நாட்கள் முன்கூட்டியே படப்பிடிப்பை முடித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.