கடந்த 18 தினங்களாக மரணித்தாரா கடத்தப்பட்டாரா என்ற சவுதி மன்னர் குடும்பத்தின் எதிரியான பத்திரிகையாளர் 59 வயதுடைய ஜமால் காஸ்கோக்கி மரணித்துவிட்டதாக சவுதி அரேபியா இன்று சனி 20.10.2018 உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதராலயத்தில் இடம் பெற்ற அசாதாரணமான ஒரு சூழலில் இடம் பெற்ற மோதலில் இவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சவுதி மன்னர் குடும்பம் இந்த விடயத்தை மிகவும் முக்கியம் கொடுத்து நோக்குவதாகவும் துருக்கியுடன் இணைந்து கடந்த அக்டோபர் 6ம் திகதியில் இருந்து தமது விசாரணைகள் ஆரம்பித்தாகவும் கூறுகிறது.
துருக்கிய விசாரணைப் பிரிவினர் தமது இஸ்தான்புல் தூதராலயம், கொன்ஸ்சலேற்தர அதிகாரியின் இல்லம், வேறு இரண்டு மசூதிகளில் தேடுதல் நடத்த தாம் ஒத்துழைப்பு வழங்கியதாகவும், சவுதி மன்னர் அனைத்து விசாரணைகளையும் முறைப்படி முடுக்கிவிட உத்தரவிட்டதாகவும் அரண்மனை குறிப்புரை கூறுகிறது.
மேலும் நடந்தது என்ன.. பூரண விபரம் தரப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. முன்னதாக இரு தரப்பிற்கும் கடும் மோதல் நடந்துள்ளது, அத்தருணம் மரணம் நடந்துள்ளது.
பூரண விசாரணை நடத்தப்படும் என்றும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட 18 பேரை கைது செய்துள்ளதாகவும், சவுதி இளவரசரின் உயர்மட்ட ஆலோசகர்கள் இருவரை பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் அந்த நாட்டு தொலைக்காட்சியான அல் எக்பரியா செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் கொல்லப்பட்டார் என்றால் சடலம் எங்கே மரணத்திற்கான காரணம் யாது.. அது பற்றி சவுதி தொலைக்காட்சி எதுவும் சொல்லவில்லை விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கிறது.
இது குறித்து கருத்துரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்ப் சவுதி இப்போது சரியான திக்கில் காலடி வைத்துள்ளது. இது முதலாவது அடிதான் மேலும் பல அடிகள் நடக்க வேண்டியிருக்கிறது. ஆகவே இது குறித்து தான் பூரணமான கருத்துரைக்க காலம் சரியாக முதிரவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் அமெரிக்க வெள்ளை மாளிகை கூறும்போது இது நாடகத்தன்மை மிக்க நிகழ்வாக இருப்பதாகக் கூறியிருக்கிறது.
நாடகத்தன்மை மிக்க இந்த மரணத்தை ஐ.நா செயலர் அன்ரோனியோ குற்றராஸ்கி வன்மையாக எதிர்த்துள்ளார். கூடவே தனது தரப்பில் கவலை வெளியிட்டுள்ளார்.
ஆனால் சவுதி அரேபியாவின் செயல் நம்பிக்கை தன்மையற்றது என்று சர்வதேச சமுதாயம் தனது கருத்துக்களை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளது.
சவுதி இழைத்த தவறுகள் மிகவும் சிறுபிள்ளைத்தனமானது..
விவாகரத்து விடயம் தொடர்பாக முதலில் சவுதி தூரலாயம் போன இவர் மறுபடியும் அக்டோபர் 2ம் திகதி வரும்படி அழைக்கப்பட்டிருந்தார். அதற்கேற்ப அவரை கடத்திச் செல்லவோ அல்லது கொல்லவோ சவுதி கொன்சலேற் தர தூதராலயம் திட்டமிட்டிருக்கிறது. சவுதி இளவரசரை விமரிசிக்கும் இவரது மரண விடயத்தில் இளவரசரின் இரண்டு உயர்மட்ட ஆலோசகர்கள் பதவி நீக்கப்பட்டமை கவனிக்கத்தக்கது.
அக்டோபர் 3ம் திகதி காணாமல் போன அவர் தூதராலயத்தின் பின் கதவால் வெளியேறிவிட்டதாகவும் மேலதிகமாக தமக்கு எதுவும் தெரியாதென சவுதி தெரிவித்தது.
அக்டோபர் 6ம் திகதி ஜமால் காஸ்கோக்கி கொல்லப்பட்டுவிட்டார். சடலம் தூதராலயத்தில் இருந்து கறுப்புநிற வாகனத்தில் வெளியேற்றப்பட்டதாக துருக்கி கூறியது.
அக்டோபர் 9ம் திகதி ஜமால் காஸ்கோக்கி தூதராலயத்திற்குள் போகும் காணொளியை துருக்கி வெளியிட்டு அவர் திரும்பவில்லை என்பதை உறுதி செய்தது.
அக்டோபர் 10 ம் திகதி துருக்கிய அதிகாரிகள் சவுதி அரேபியாவின் உளவுப்பிரிவினர் துருக்கி வந்ததையும் பின் வெளியேறுவதையும் காட்டும் படங்கi அம்பலப்படுத்தினார்கள்.
அக்டோபர் 15ம் திகதி சவுதி மன்னர் துருக்கிக்கு போன் செய்து துருக்கிய அதிபருடன் பேசி இரு நாடுகளும் இணைந்து விசாரணைகளை மேற் கொள்ளலாம் என்று கூறியிருந்தார். அதற்குள் தடயங்கள் யாவும் அழிக்கப்பட்டு, தூதராலயம் முற்றாக சுத்தம் செய்யப்பட்டு, கண்காணிப்பு கமேராக்கள் மாற்றப்பட்டு காரியங்கள் முடிந்துவிட்டன என்று செய்திகள் கூறின.
அக்டோபர் 16ம் திகதி இரு நாடுகளும் தேடுதல் நடத்தின ஆனால் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அமெரிக்க அதிபர் சவுதி மன்னருடன் தொலைபேசி வழியாக பேசி தனது வெளியுறவுத்துறை அமைச்சரையும் அனுப்பி வைத்தார்.
அக்டோபர் 17ம் திகதி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சவுதி மன்னருடன் பேசிவிட்டு துருக்கிக்கு போய் துருக்கிய அதிபருடன் பேசினார். அதன் பின்னர் கொன்சலேற் தர அதிகாரி இல்லம் சோதிக்கப்பட்டது. அதற்குள் அவர் சவுதி போய்விட்டார்.
இப்படி பல பொய்களை க் கூறி கடைசியாக முழு பூசினிக்காயைச் சோற்றில் புதைக்க முடியாமல் மரணத்தை ஒப்புக்கொண்டுள்ளனர் சவுதி அரச குடும்பத்தினர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நேரடியாக ஓடிச்சென்று சவுதிக்கு ஆலோசனை வழங்கிய பின் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்துமே சவுதிக்கு எதிரான திக்கிலேயே நின்றன. தனித்துவிடப்பட்டதாலேயே சவுதி உண்மையை கூற வேண்டிய நிலை வந்தது. இருந்தாலும் இன்னமும் இந்த விவகாரத்தில் வெகு தூரம் போக இடமிருக்கிறது.
ஜமால் காஸ்கோக்கி கொல்லப்பட முன்னர் 15 சவுதி உளவுப்பிரிவினர் அவருடைய வருகையை முன்னரே எதிர்பார்த்து வந்துள்ளார்கள். வந்த 15 பேரும் சவுதி தூதராலய இல்லத்தில் தங்கியிருந்து வெளியேறினர்.
மேலும் 18 பேரை கைது செய்து சவுதி விவகாரத்தை மன்னர் குடும்பத்திற்கு வெளியில் நகர்த்த முயன்றுள்ளது. உண்மையில் சவுதி இளவரசருக்கும் கொல்லப்பட்ட ஊடகவியலாளருக்குமே பிரச்சனை.
மன்னர் குடும்பம் சம்மந்தப்படாமல் வெறுமனே 15 உளவுப்பிரிவினர் அதுவும் இளவரசரின் மெய்பாதுகாவலர் அங்கு வந்து இந்தக் கொலையில் தொடர்புபட்டிருக்க முடியாது. ஆகவே மன்னர் குடும்பத்தை தவிர்த்து ஒரு விளக்கத்தை தருவதை உலகம் ஏற்கக்கூடிய நிலையில் இல்லை.
சவுதி அரச குடும்பம் இந்த விவகாரத்தில் தனது நம்பிக்கை தன்மையை இழந்த ஒரு றெஜீமாகவே கருதப்படுகிறது.
மேலும் அமெரிக்காவிற்கு இரண்டு பெரும் பிரச்சனைகள் இருக்கின்றன. சவுதியை தண்டிக்கப்புறப்பட்டால் ஆயுத விற்பனையில் பெரும் அடி விழும். சவுதிக்கான ஆயுதங்கள் தடுக்கப்பட்டால் அமெரிக்காவில் 600 பேர் ஆயுதத் தொழிற்சாலைகளில் வேலையிழக்க நேரிடும். இதை அமெரிக்கா விரும்பாது. எனவேதான் சவுதி சரியான பாதையில் போவதாக இராக ஆலாபனை செய்துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் செயலை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்ளாது. சவுதியின் மனித உரிமை மீறலை பூசி மெழுகிக் கொண்டு உலக மனித உரிமை மீறல் பற்றி பேச எதுவும் கிடயாது என்று ஐரோப்பா கருதும், இதனால் இரு தரப்பிற்கும் வெடிப்பு ஏற்படும்.
பத்திரிகை சுதந்திரத்தை காக்க ஏற்கெனவே டென்மார்க்கில் முகமது கேலிச்சித்திர விவகாரம், பிரான்சில் சார்ளி கெப்டோ தாக்குதல் போன்ற விடயங்களில் ஐரோப்பா பெரிய விலை கொடுத்திருக்கிறது.
மத்திய கிழக்கில் நடக்கவுள்ள வர்த்தகத்தில் அடி விழுந்தாலும் அதுபற்றி கவலைப்படாமல் ஐரோப்பா ஊடக சுதந்திரத்திற்கு போராடியது. இந்த நிலையில் சவுதி சரியான திசையில் காலடி வைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் கூறிய விளக்கம் ஐரோப்பாவை ஒருபோதும் திருப்திப்படுத்தப் போவதில்லை.
மேலும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பேச்சாளர் சாரா சாண்ட்ராஸ் இதை சவுதி மன்னர் குடும்பத்தின் குற்றச் செயலாக பார்க்கவில்லை. துயரமான நாடகத் தன்மை மிக்க செயல் என்றே வர்ணித்துள்ளார்.
ஜமால் காஸ்கோக்கி தூதராலயத்தில் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் தரும் ஒலி தொகுப்பை துருக்கி வைத்திருக்கிறது அதை இன்னமும் பகிரங்கப்படுத்தவில்லை.
துருக்கியின் இரண்டாவது பெரிய நகரான இஸ்தான்புல்லின் சுற்று வட்டகையில் இறந்த ஊடகவியலாளரின் சடலத்தை தேடுகிறார்கள். துருக்கிக்கு இப்போதுதான் தகவல் கிடைத்துள்ளது. இனி அமெரிக்காவுடன் ஆலோசித்தே தனது கருத்தை தரும் என்று எதிர்பார்க்கலாம்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ போன போதே விவகாரம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவர் கொல்லப்பட்ட செய்தி அறிந்திருக்காவிட்டால் இவ்வளவு விரைவாக அவர் சவுதிக்கு ஓடியிருக்கமாட்டார் என்பதையும் உணர முடிகிறது.
உலகத்தின் எந்த நாடுமே இந்த மரணம் சரியானது என்பதை ஏற்க தயாராக இல்லை. அனைத்து நாடுகளும் துருக்கியின் விசாரணைகளுக்கு உதவுகின்றன. நிருபரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டால் அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பதை எளிதாகவே புரிய முடியும்.
இதுபற்றி ரஸ்ய அதிபர் என்ன கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் சவுதியை குற்றவாளியாகக் காணவில்லை. சவுதி இளவரசரையும் ரஸ்ய அதிபர் புற்றினையும் ஜனநாயகத்தின் எதிரிகள் என்று ஜமால் காஸ்கோக்கி கூறியது அவருக்கு தெரியும்.
மேலும் நேற்று ரஸ்யாவின் சொற்ஜி நகரில் நடந்த வருடாந்த அரசியல் மாநாட்டில் பேசிய ரஸ்ய அதிபர் அமெரிக்கா எப்போதுமே சிறு சிறு தவறுகளை இழைத்து வருகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்களுடைய ஏகாதிபத்திய தனியுரிமை படிப்படியாக அழிவடைந்து வருகிறது. அது முற்றாக அழிவடையும் தருணம் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
சவுதி அரேபியாவின் நிருபர் மரணத்தின் பின் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மர்மங்கள் தம்மை பாதிக்காது என்றும். சிரியா விவகாரத்தில் ரஸ்யா மேலும் ஒரு புதிய பாத்திரத்தை வகிக்கப் போவதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
அதேவேளை ரஸ்யா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்த ஏவுகணைகள் வந்தால் அவை அனைத்தும் ஆகாயத்திலேயே மரணமடைவதை நீங்கள் காண்பீர்கள் என்றும் கைதட்டல்களிடையே கூறியிருக்கிறார்.
ஆக ஜமால் காஸ்கோக்கி மரணம் தற்செயலானது என்று எண்ண இதுவரைக்கும் போதிய காரணங்கள் எதுவும் இல்லை.
கொலையாளிகளால் அவருடைய உடலம் துண்டாடப்பட்டு துருக்கியின் ஜெலோவா நகரில் உள்ள பெல்கார்ட் காட்டுப்பகுதியில் வீசப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு தேடுதல் நடக்கிறது.
தொடர்கிறது.. மர்மம்..
அலைகள் 20.10.2018 சனி மதியம்