ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி ரூ.1 கோடி செலவு

ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக தமிழக அரசு ரூ.1 கோடி செலவு செய்துள்ளது என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சையது தமீம் என்ற சமூக ஆர்வலர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் பொது தகவல் தொடர்பு அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக தமிழக அரசு எவ்வளவு செலவு செய்தது? என்ற கேள்விக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக ரூ.99 லட்சத்து 33 ஆயிரத்து 586 செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் ஜெயலலிதா எப்போது இறந்தார்? என்ற கேள்விக்கு 5-12-2016 அன்று ஜெயலலிதா இறந்தார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு தமிழக அரசு எவ்வளவு செலவு செய்தது? என்ற கேள்விக்கு தமிழக அரசு செலவு செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு தற்போது ஓய்வூதியம் வழங்கப்படுகிறதா? அந்தத் தொகை யாருக்கு வழங்கப்படுகிறது? என்ற கேள்விக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பென்ஷன் தொகை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் சட்டமன்றச் செயலாளரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது குறித்து அவர் தான் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts