எம்.ஏ.சுமந்திரன் : பாராளுமன்ற உறுப்பினர், கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர். இலங்கை தமிழரசு கட்சி.
பதில் 01 : வடக்கு மாகாண சபையை என்ன நோக்கத்திற்காக நாம் பொறுப்பேற்றமோ அது நிறைவேற்றப்படவில்லை. அதிகார பகிர்வை கோரியது நாம். ஆனால் ஏனைய மாகாண சபைகள் செய்தவற்றை விட குறைவாகவே வடக்கு மாகாண சபை செயற்பட்டிருக்கின்றது. மாகாண சபையூடாக அழிவிலிருந்த மக்களை மீள கட்டியெழுப்பலாம் என்பதற்காகவே அதனை பொறுப்பேற்றோம். ஆனால் அது நடைபெறவே இல்லை.
சர்வதேச ரீதியிலும், அரசியல் ரீதியிலும், தேசிய ரீதியிலும் தீர்மானங்களை நிறைவேற்றுவதிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதிகாரங்களை உபயோகிக்க கூடிய நியதிச்சட்டங்களை உருவாக்கவில்லை. கொடுத்த கடமை சரியாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கு நாமும் பொறுப்பு கூற வேண்டியவர்களாக இருக்கின்றோம். முதலமைச்சரது தவறான செயற்பாடுகளால் பல குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.
பதில் 02 : இது வரை விட்ட தவறுகளை திருத்திகொள்ள வேண்டும். அதிகார வரம்புகளை சரியாக உணர்ந்து செயற்பட வேண்டும். இருக்கின்ற அதிகாரங்களை சரியாக உபயோகிக்க கூடிய நியதிச் சட்டங்களை உருவாக்க வேண்டும். தீர்மானங்களை மாத்திரம் நிறைவேற்றுகின்ற சபையாக இருக்காமல் அடிப்படையில் செய்யப்பட வேண்டிய பல விடயங்களை செய்ய கூடிய சபை உருவாக வேண்டும்.
தற்போதிருந்த வடக்கு மாகாண சபையின் போக்கை மாற்றி மக்களுக்கு சேவை செய்ய கூடிய சபையாக உருவாக வேண்டும். இதேவேளை இம் மாகாண சபையானது இதுவரை 134 அமர்வுகளை நடாத்தியுள்ளதுடன் இதன்போது 442 பிரேரணைகளையும் நிறைவேற்றியுள்ளது. இவற்றுள் 05 பிரேரணைகள் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் இனப் பிரச்சனை தொடர்பாகவும் நிறைவேற்றப்பட்டவையாகும். இவை தவிர இது வரையில் 32 நியதிச் சட்டங்களை மாத்திரமே உருவாக்கியுமுள்ளது.