தமிழர் கூட்டமைப்புடன் தனக்கு பிரச்சனை வர ஈகோ பிரச்சனை காரணமல்ல என்று சி.வி.விக்கினேஸ்வரன் கூறியிருக்கிறார்.
துரோகிகளுடன் கூட்டு வைத்த அவர்களுடன் சேர்ந்தியங்க முடியாதென இது தொடர்பாக கேட்டவர்களுக்கு பதில் கூறிவிட்டேன் என்றார்.
இதை நல்லாட்சி அரசு என்று கூறும் தமிழர் கூட்டமைப்பு ஒரு தடம் புரண்ட அமைப்பே என்றும் பகிரங்கமாகவே சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் ஒரு மக்கள் இயக்கத்திற்கு தலைமை தாங்கப் போவதாக தெரிவித்த அவர் கூட்டமைப்பின் மீது பின்வரும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.
01. போர்க்குற்றச்சாட்டை நிறுவுவதற்கும், நடந்தது இனப்படுகொலை என்பதற்கான ஆதாரங்களை திரட்டி போராடவும் தவறிவிட்டனர்.
02. அதிகார ஆசையாலும், பதவி மோகத்திலும் இன்று திசை மாறிப்போய்விட்டனர்.
03. அன்று யாரை எல்லாம் துரோகிகள் என்றார்களோ.. எதுவெல்லாம் துரோகம் என்றார்களோ இன்று அதையெல்லாம் சரியென ஏற்று அந்தவழி சென்று தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்கள்.
04. வலிகாமம் வடக்கில் சிறு துண்டு காணிகளை விடுவித்ததை பெரிதாக பேசியபடி வன்னியில் பெரும் நிலமே விழுங்கப்படுவதை தடுக்க எதுவும் செய்யாமல் பதவி சுகத்தில் மாந்திக் கிடக்கிறார்கள்.
05. உரிமையை பெறுவதை விட அபிவிருத்தியே முக்கியம் என்று எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். இன்று அபிவிருத்தியும் இல்லை உரிமையும் இல்லை. இவர்கள் பதவியில் இருப்பதை விட கண்டது எதுவும் இல்லை.
06. ரி.ஆர்.ஓவின் பெரிய நிதி அரசால் உறைய வைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு ஆதரவளிக்கும் இவர்களால் அதைக்கூட மீட்க முடியவில்லை.
07. இன்றுவரை வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்கும் இவர்கள் அரசியல் கைதிகள் விடுதலைக்கு எதுவும் செய்யவில்லை. பாராளுமன்றத்தில் 16 பேர் இருந்தும் பயன் எதுவும் இல்லை.
08. தீர்வுத் திட்டம் வருகிறது 2016ல் என்றார்கள் பின் 2017 தொடர்ந்து 2018 வரை தீர்வு வருகிறதென ஏமாற்றி வருகிறார்கள். அதற்காக உருப்படியாக எதையுமே செய்யவில்லை.
09. அரசாங்கம் சிங்கள பௌத்த குடியேற்றங்களை விஸ்த்தரிக்கிறது இன்றும். அதைத் தடுக்க உளமார எதுவுமே செய்யவில்லை.
10. கூட்டமைப்பினர்க்கு மடியில் கனமிருக்கிறது அதனால் வழியில் பயமிருக்கிறது. அதனால்தான் மன்னார் புதைகுழிகளை பார்த்தும் வாய் மூடி கிடக்கிறார்கள் என்றும் கூறினார்.