என் மீது அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திப்பேன் என்று நடிகை சுருதி ஹரிகரன் கூறினார்.
நடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை சுருதி ஹரிகரன் ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். படப்பிடிப்பு ஒத்திகையில் அர்ஜூன் தன்னை இறுக்கி அணைத்து கைவிரல்களை உடலில் படர விட்டதாக குற்றம் சாட்டினார். அர்ஜூன் இதனை மறுத்தார். சுருதி ஹரிகரன் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று கூறினார்.
அர்ஜூன் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவும் பணம் பறிக்கும் முயற்சியில் சுருதி ஹரிகரன் பாலியல் புகார் சொல்கிறார் என்று கண்டித்தார். கன்னட திரைப்பட வர்த்தக சபை அர்ஜூனையும், சுருதி ஹரிகரனையும் சந்திக்க வைத்து சமரச முயற்சியில் ஈடுபடப்போவதாக அறிவித்தது.
இந்த நிலையில் சுருதி ஹரிகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:–
‘‘சமரச முயற்சி சம்பந்தமாக கர்நாடக வர்த்தக சபையில் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. வந்தால் என்னுடைய கருத்தை தெரிவிப்பேன். அன்று என்ன நடந்தது என்பது அர்ஜூனுக்கு தெரியும். பெண்கள் தங்கள் பிரச்சினைகளை தைரியமாக வெளிப்படுத்த மீ டூ இயக்கம் உதவுகிறது.
தவறு செய்துவிட்டு தப்பிக்கலாம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். இனிமேல் அது முடியாது. பெண்களை மீ டூ பாதுகாக்கும். பல அப்பாக்களுக்கு மகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. ஐஸ்வர்யாவுக்கு அர்ஜூன் சிறந்த தந்தையாக இருப்பது மகிழ்ச்சி. என்மீது அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திப்பேன். ஆனால் அவருக்கு முன்னால் நான் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டேன்.’’
இவ்வாறு சுருதி ஹரிகரன் கூறினார்.