அன்று அவர் வெல்லுவார் முதல் பெண்மணி ஆவார் என்று நானும் மிகவும் ஆவலாக இருந்தேன்.
வெல்ல வில்லை என்றதும் வேதனைப்பட்டதும் உண்டு.
அவர் தோற்கடிக்கப்பட்டார்.
பெண்மையெனும் மாண்புடை மேன்மையை
கண்மையான கருமேகங்கள் மறைப்பதை
திண்மையான வேலையாகக் கொண்டதே
வண்மை உலக வழக்கு!
வெண்மை கிலரி கிளிண்டனும்
விதிவிலக்கல்ல என்றதிந்த நூல்..
கையிலெடுத்ததும் வைக்க மனமற்ற
மையலுடைய தமிழும், பரபரப்பும்,
வல்மான், அரதப்பழைய என்ற
சொல்லின் பாவனைகளும் ஒரு
வல்லமை மொழிபெயர்ப்பு வீரனை
துல்லியமாய்த் துப்பறிந்து காட்டியது
இத்தனை ஆண்டுகால மொழிபெயர்ப்பு
மொத்தத் துளிகளின் திரட்டலின்
சத்தான சாரமிது, சேமித்த
சொத்தெமக்கு வரம் இது!
பொத்தென்று வீழேன்! மீண்டும்
நித்தியமாயெழுவேன் என்கிறது அட்டைப்படம்!.
அறிவின் ஒளியும் தீர்க்கமும்
அறிவுறுத்த, வீழ்வேனென்று நினைத்தாயோ!
தெறிக்கும் தன்னம்பிக்கைச் சிரிப்பது!
முறியாத முயற்சியும், தேவைக்குக்
குறியான மௌனமும் பெண்ணே
எறிவேலாகப் பயனாக்கு! என்கிறது.
பெண்களே மயக்கம் விடுங்கள்!
மாண்பினை இணையுங்கள்! உலகின்
கண்கள் தான் நீங்களென்பதை
பண்போடு காட்டுங்களென்ற ஊக்கமிது.
புண்ணான சோம்பலை வீசுங்கள்!
வண்ணம் காட்டி வளமாகுங்கள்.
வேதா. இலங்காதிலகம்