டென்மார்க்கின் புகழ் பெற்ற சங்கீத ஆசிரியை இசைக்கலைமணி குமுதினி பிறித்திவிராஜ் அவர்களுடைய சாகித்திய சுருதிலயா இசைக்கல்லூரி எல்லோர் கவனத்தையும் தொடும் சிறந்த கைங்கரியம் ஒன்றை கடந்த 20.10.2018 சனிக்கிழமையன்று சாத்தியமாக்கியிருந்தது.
சாகித்திய சுருதி லயாவில் சங்கீதத்தை முறைப்படி பயின்று வரும் மாணவியரில் ஆறு பேரை சங்கீத அரங்கேற்றம் போன்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு தயார் செய்து அரங்கேற்றியிருந்தனர்.
கேர்னிங் நகரில் உள்ள இலக்கம் 7 கலாச்சார இல்லத்தில் நடைபெற்றது.
அத்தருணம் தனித்தனியாக நடைபெறும் அரங்கேற்றங்கள் போலவே ஆறு மாணவியரும் சிறந்த கர்னாடக இசை நிகழ்ச்சியை வழங்கி அவையை மகிழ்வித்தார்கள்.
இது சங்கீத அரங்கேற்றமா ? இல்லை இசை நிகழ்ச்சியா ? என்று பிரித்தறிய முடியாதளவுக்கு இசை சமர்ப்பணங்கள் நேர்த்தியாக இருந்தன.
ஒவ்வொரு மாணவியும் சுமார் ஒரு மணி நேரம் கொண்ட சங்கீதக்கச்சேரியை நடத்தி பல்வேறுவிதமான பாடல்களையும் அரங்கப்படுத்தினார்கள்.
இதில் விசேடம் என்னவென்றால் ஒருவர் பாடிய பாடலை மற்றவர் பாடாமல் தொடர்ந்து வௌ;வேறு பாடல்களை பாடியதால் அரங்கு தொடர்ந்து விறுவிறுப்பாக நகர்ந்தது.
எப்போதுமே பிள்ளைகள் ஆற்றலுடனும் தயாருடனுமே இருக்கிறார்கள். அவர்களுக்கான வாய்ப்புக்களை சமுதாயம் ஏற்படுத்தினால் பெரும் பெரும் கலைஞர்களை இங்கேயே நிச்சயமாக உருவாக்கலாம் என்றதற்கு இந்த நிகழ்ச்சியை விட வேறு உதாரணம் வேண்டியதாக இருக்கவில்லை.
ஆறு இளம் பாடகிகளும் தேர்த பாடகிகளை விஞ்சுவது போல முகபாவனை, அவையின் தரிசனம், பாடல்களுக்கான நவரச பாவனைகள், பக்கவாத்தியங்களின் நடைக்கு இணையான முகபாவனைகள் போன்றவற்றை வழங்கிப் பாடியது புதுமையாக இருந்தது.
தாளத்தை விடக்கூடாது, சுருதி சுத்தம் அவசியம், காலம் முக்கியம், ஒரு பாடலின் தாதுப்பொருட்கள் யாவை அவற்றை அறிவது எப்படி, அந்த அறிதலை அரங்கில் தருவது எப்படியென ஒரு தேர்ந்த பாடகி விளங்கியிருக்க வேண்டிய தர்மத்தை தம்மால் இயன்றதை விட அதிகமாக அள்ளித்தந்தார்கள்.
ஜேர்மனியில் இருந்து சதா பிரணவநாதன் தலைமையில் பக்கவாத்திய குழுவினர் வருகை தந்திருந்தனர்.
பெற்றோர் இணைந்து சிற்றுண்டிகள், இரவு உணவு போன்றவற்றை வழங்கி அசத்தினார்கள்.
அரங்கம் நிறைந்த அழகிய நிகழ்ச்சி.
அலைகள் 26.10.2018 வெள்ளி