ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 89 பேரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று (26) பிற்பகல் இடம்பெற்ற ஊடக ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த விசாரணைகளின்போது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இருவர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் 47 பேரிடம் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டதாக, அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த 5 நாட்களாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய, தீவிரவாத விசாரணை விசாரணைப்பிரிவின் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த, முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, நேற்றைய தினம் CID’யில் வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
நேற்று (25) இரவு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.