யுத்தம் இல்லை, துப்பாக்கிகள் இல்லை என்றாலும் இன்று ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் சுட்டுக்கொண்டிருக்கின்றோம். நாம் முரண்படும் போதும் ஒருவரோடு ஒருவர் அடித்து கொள்ளும் போதும் வார்த்தைகளால் சுடுபடும் போதும் எதிரிகள் எம்மைப்பார்த்து சிரிக்கிறார்கள். அதற்கு இடமளிக்கக் கூடாது.
அந்த நிலை மாற வேண்டுமென தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் நேற்று தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவர் தெல்லிப்பளை பகுதியில் நேற்று(26) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மீள்குடியேற்றம் என்பது பல பிரிவுகளைகொண்டது. இதில் வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், வீதிகள் புனரமைத்தல் என்பன அடங்கும். உட்கட்டமைப்பு என்கின்ற போது மின்சாரம், குடிநீர் உள்ளடங்கும்.இந்த விடயங்கள் பூரணப்படுத்தப்பட்டு மனித வளங்கள் பௌதீக வளங்கள் வழங்கப்பட்டால் அதில் மீளக்குடியேறி சுயதொழில் வாய்ப்பு அல்லது அரச வேலைவாய்ப்பு, தனியார் வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்தால் கிராமங்கள் உருவாகின்றன.இவ்வாறு கிராமங்கள் உருவாகும் போது தான் மீள்குடியேற்றம் முழுமையடையும்.
யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்றன. ஆனால் யுத்தம் நிறைவடைந்துள்ளதை வைத்து கொண்டாடுவதா? அல்லது நினைத்து துன்புறுவதா? எனத் தெரியவில்லை. ஆனால் என்னை பொறுத்த மட்டில் கொண்டாட்டம் தேவையில்லை என்றே கூறுவேன். துன்புறுவதும் தேவையில்லை. எதிர்காலத்தை எப்படி வளப்படுத்துவது என்ற மனோதிடத்தை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்று தான் நாம் சிந்திக்க வேண்டும்.
இந்த யுத்தம் நடத்தப்பட்ட முறைமை நிச்சயம் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் யுத்தம் நிறைவடைந்தது சந்தோசமான விடயம் தான். யுத்தம் இல்லை என்றால் மக்கள் கொல்லப்படுவது, அங்கவீனர் ஆக்கப்படுவது, கிராமங்கள் எரியூட்டப்படுவது, வீடுகள், கோயில்கள், சனசமூக நிலையங்கள் தரைமட்டம் ஆக்கப்படுவது, வாழ்வாதாரம், மக்கள் காணாமல் போகச் செய்யப்படுவது எல்லாம் நடைபெற்றிருக்காது.
எதிர்வரும் டிசம்பர் 31 க்கு முன்பதாக கையகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து தனியார் காணிகளும் முதற்கட்டமாக வடக்கு கிழக்கு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. அதே நேரம் பாடசாலைக்கு சொந்தமான கட்டடமோ அல்லது காணிகளோ பாதுகாப்பு துறையினரால் உடனடியாக கையளிக்கப்பட வேண்டும். அத்துடன் பாடசாலைக்கு சம்பந்தமில்லாதவர்கள் பாடசாலை வளங்களை வைத்திருந்தால் உடனடியாக கையளிக்க வேண்டும்.அதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன்.
இது வரை அரசியல் தீர்வு எமக்கு கிடைக்கவில்லை ஆயினும் அதற்காக நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். இதனை பெற எமக்குள்ளே சண்டை பிடிக்க முயலக்கூடாது. எதிரிகள் எம்மை பார்த்து சிரிக்கும் அளவிற்கு எமது செயற்பாடுகள் அமைய இடமளிக்கக் கூடாது.
கடந்த காலங்களிலே நாங்கள் பல இயக்கங்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டிருந்தோம்.ஆனால் இன்று துப்பாக்கி வன்முறை ஆயுதம் இல்லை என்ற காரணத்தினால் வார்த்தைகளால் சுட்டுக்கொண்டு இருக்கின்றோம்.அந்த நிலை மாற வேண்டும்.
மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும்.இங்கு தாய்மார்கள் இளைஞர்கள் பெரியோர்களின் முகங்களை பார்க்கின்ற போது எல்லோரது முகத்திலும் கேள்விக்குறி தென்படுவதாகவே பாரக்கின்றேன்.அந்த கேள்விக்குறி மக்களை வதைத்து முள்ளாக தைக்கின்றது. அந்த கேள்விக்கான விடை எம்மைப்போன்றவர்களே விடையளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என கூறினார்.