வெள்ளிக்கிழமை மாலையில் இலங்கையில் துவங்கிய அரசியல் நெருக்கடி, அதன் பின்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம், இலங்கை – இந்திய உறவு ஆகியவை குறித்து ஃப்ரண்ட்லைன் இதழின் அசோசியேட் எடிட்டரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.கே. ராதாகிருஷ்ணனிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். அந்தப் பேட்டியிலிருந்து:
கே. இலங்கையில் தற்போது நடக்கும் அரசியல் நிகழ்வுகளின் பின்னணி என்ன?
ப. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் பல மாதங்களாகவே மோதல் இருந்துவந்துள்ளது. தற்போது அங்கு நடந்திருப்பது அரசியல் சாஸனத்திற்கு முற்றிலும் விரோதமானது. இலங்கை அரசியல் சாஸனத்தில் செய்யப்பட்ட 19வது திருத்தத்திற்குப் பிறகு பிரதமரை நீக்க ஜனாதிபதிக்கு மூன்று வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று, பிரதமர் தானாக முன்வந்து தனக்கு பிரதமர் பதவியில் விருப்பமில்லையென எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். இரண்டாவதாக, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாமல் இருக்க வேண்டும். அல்லது பெரும்பான்மையை இழக்க வேண்டும். ஆனால், தற்போது இந்த மூன்றில் எதுவும் நடக்காத நிலையில்தான் புதிதாக ஒரு பிரதமரை ஜனாதிபதி நியமித்திருக்கிறார். சிறிசேனவுக்கு அரசியல் ரீதியான நெருக்கடிகள் அதிகரித்துவந்த நிலையில், மஹிந்தவோடு கூட்டு சேர்ந்தால் அவற்றைச் சமாளித்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
ஆனால், அரசியல்சாஸனத்தின்படி பார்த்தால் ரணில் இன்னமும் பிரதமராகத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். ஆனால், மஹிந்தவும் பிரதமராக பதவியேற்றிருக்கிறார். மஹிந்த பதவியேற்ற பிறகு உடனடியாக அரசுக்குச் சொந்தமான ரூபவாஹிணி, லேக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றை மஹிந்தவின் ஆட்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். அங்கு இப்போது ஒரு ஸ்திரமற்ற நிலைமையும் வன்முறை ஏற்படக்கூடிய சூழலும் இருக்கிறது.
கே. 19வது திருத்தச்சட்டத்தின்படி பிரதமரை ஜனாதிபதி நீக்க முடியாது என்றாலும் 42 ஏ பிரிவின் கீழ் தான் இதைச் செய்திருப்பதாக சொல்கிறார் மைத்திரிபால சிறிசேன. இது சரியா?
ப. 42 ஏவின் படி, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பவரை ஜனாதிபதி நியமிக்கலாம். அவ்வளவுதான். அதை அவர் ஏற்கனவே செய்துவிட்டார். 2015லேயே இது முடிந்துவிட்டது. இந்த வருடம் ஏப்ரலில்கூட ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் வெற்றிபெற்றார். அதற்குப் பிறகு யாரும் கட்சி மாறவில்லை. அப்படியிருக்கும்போது இம்மாதிரி செய்வது, அரசியல் சாஸனத்திற்கு எதிரானது. பொது நீதிக்கு எதிரானது. அரசியல் மாண்புக்கு எதிரானது. எல்லாம் கேலிக்கூத்தாகிவிட்டது.
கே. மைத்திரிபால சிறிசேனவுக்கு அரசியல் ரீதியாக சிக்கல் இருப்பதாகச் சொன்னீர்கள். என்ன சிக்கல் அவருக்கு?
ப. 2015ல் இந்த அரசு தேர்வுசெய்யப்பட்டு தேசிய ஐக்கிய அரசு உருவாக்கப்பட்டது. அப்போது அவர்கள் பல வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். ஆனால், அதில் எதையுமே நிறைவேற்றவில்லை. அடுத்த ஆண்டு மீண்டும் அதிபர் தேர்தல் வரும்போது, தானே ஜனாதிபதியாக வேண்டுமென சிறிசேன நினைக்கிறார்கள். அப்போது தனியாகவோ ஐக்கிய தேசியக் கட்சியுடன் நின்றாலோ அது நடக்காது என நினைக்கிறார் சிறிசேன. அதனால், இப்போது அவர் எடுத்துள்ள முடிவு முழுக்க முழுக்க சுயநலத்தின் அடிப்படையில் எடுத்த முடிவு.
இந்த அரசு தேர்வு செய்யப்பட்டவுடன் பல வாக்குறுதிகளைத் தந்தார்கள். ஆனால், எதையும் நிறைவேற்றவில்லை. மக்கள் தவித்துப்போயிருக்கிறார்கள். சீனாவின் கடனுதவித் திட்டங்களால் பெரும் கடன் சுமை ஏற்பட்டுவிட்டது; ஆகவே பல திட்டங்களை நிறுத்தப்போவதாகச் சொன்னார்கள். ஆனால், ஒரு திட்டமும் நிறுத்தப்படவில்லை. எதுவும் நடக்கவில்லை. மக்கள் பெரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதற்கு மஹிந்தவே பரவாயில்லையென நினைக்கிறார்கள். அவருடைய அந்த பிரபலத்தில் தான் மீண்டும் ஜனாதிபதியாகலாம் என நினைக்கிறார் சிறிசேன. அதனால்தான் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருக்கிறார்.
கே. ரணில் விக்ரமசிங்கே முன்பிருக்கும் வாய்ப்புகள் என்ன?
ப. ரணிலுக்கு இருக்கும் முக்கியமான வாய்ப்பு, பாராளுமன்றத்தில் தனக்கு இருக்கும் பெரும்பான்மையை நிரூபிப்பது. இதற்காகத்தான் ஞாயிற்றுக்கிழமை ஒரு கூட்டத்தைக் கூட்ட அவர் திட்டமிட்டிருந்தார். இதையடுத்துத்தான் பாராளுமன்றக் கூட்டத்தை முடக்கி ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அடுத்து எப்போது பாராளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுவது என்பதை ஜனாதிபதிதான் முடிவுசெய்வார். எப்போது மஹிந்த ராஜபக்சேவால் தனது பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய சூழல் வருகிறதோ அப்போதுதான் பாராளுமன்றம் கூட்டப்படும்.
தொடர்புடைய செய்திகள்:
ரணில் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லலாம். அங்கு என்ன நடக்குமென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றால், இதுவரை இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நீதி என்பது இருந்ததில்லை. அங்கு அரசியலும் நீதியைத் தீர்மானிக்கும். தலைமை நீதிபதியை ஜனாதிபதிதான் நியமிக்கிறார். இப்படியான சூழலில் நீதிபதிகளும் அரசுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள். ஆகவே, ரணில் மீண்டும் பிரதமர் பதவியைப் பெறும் வாய்ப்புக் குறைவு.
கே. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு ஒப்பிட்டால் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூடுதல் இடங்கள் இருக்கின்றன. ஆகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்போடு பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் வெல்லும் வாய்ப்பு இருக்கிறதா?
ப. இதெல்லாம் ராஜபக்சேவால் எத்தனை பேரை வாங்க முடிகிறது என்பதைப் பொறுத்தது. முஸ்லிம் காங்கிரஸ் என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பதையும் பார்க்க வேண்டும். முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூஃப் ஹக்கீம் ரணிலுடன் தொடரப்போவதாக சொல்லியிருக்கிறார். ஆனால், இவர் ஏற்கனவே மஹிந்தவின் அமைச்சரவையில் இடம்பெற்றவர். இனி என்ன அணுகுமுறையை எடுப்பார் அவர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை அவர்கள் மஹிந்தவுடன் செல்ல மாட்டாரகள். நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சியுடன்தான் இருப்பார்கள். ஆனால், பெரும்பான்மை இடங்களை கையகப்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் நேற்றே மஹிந்த தரப்பு இறங்கியிருக்கும். அவருடைய ஆள் பலம், பண பலம், ஆட்களைத் திரட்டுவதில் அவருக்குள்ள திறமை வேறு யாருக்கும் கிடையாது. அதற்கு ஒத்தாசையாகத்தான் பாராளுமன்றம் முடக்கப்பட்டிருக்கிறது.கே. ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவின் செல்வாக்கு மக்களிடம் குறைந்திருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமையன்று அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மேலும் அவர் மீது விமர்சனங்களை உருவாக்கும். அப்படி இருக்கும்போது ஏன் அவர் இப்படிச் செய்தார்?
ப. இந்த நிலையை அவர் எடுக்கவில்லையென்றால் அவர் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஆகவே, மஹிந்தவின் செல்வாக்கை தானும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார் அவர். அதன் பிறகு, செயல் பிரதமர் என்ற அதிகாரத்தை மஹிந்தவுக்கு கொடுத்துவிட்டால் இந்தியாவில் இருப்பதுபோல ஜனாதிபதி பதவி ஒரு அலங்காரப் பதவியாகிவிடும். அம்மாதிரியான ஒரு பதவியிலாவது இருக்க வேண்டும் என நினைக்கிறார். மஹிந்தவுக்கு தென்பகுதியான ஹம்பந்தோட்டா, பொலநறுவ, கொழும்புவின் சில பகுதிகளில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. அங்கிருப்பவர்கள் மஹிந்த அடையாளம் காட்டுபவருக்குத்தான் வாக்களிப்பார்கள். இந்தக் கணிப்பில்தான் சிறிசேன இதைச் செய்திருக்கிறார்.
கே. இப்போது நடந்திருக்கும் சம்பவங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்த தேர்தலில் அனுதாப வாக்குகளைப் பெற்றுத் தருமா?
ப. இன அடையாளத்தை யார் தூக்கிப்பிடிக்கிறார்கள் என்று அங்குள்ள மக்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஐக்கிய தேசியக் கட்சி தங்களுக்கு ஆதரவாக இல்லையென சிங்களர்கள் நினைக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அந்த வாக்குகளை அறுவடை செய்யும். ஐக்கிய தேசியக் கட்சி ஒரு தமிழர் கட்சி என்ற பிரசாரம் அங்கு பெரிதாக நடத்தப்படுகிறது. அவர்கள் ஏதோ தமிழர்களுக்கு நல்லது செய்துவிட்டதாக பிரசாரம் செய்கிறார்கள். ஆகவே கொழும்புவின் சில பகுதிகளிலும் வடக்கிலும் கணிசமான வாக்குகள் அவர்களுக்குக் கிடைக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவர்களுடன்தான் இருப்பார்கள். அதுவும் சிங்கர்கள் மத்தியில் சரியாக பார்க்கப்படாது. இன அடிப்படையில் வாக்குகள் பிரியும். அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமாக இருக்காது.
கே. தற்போதைய அரசியல் நிகழ்வுகளுக்குப் பிறகு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?
ப. இந்த நிகழ்வால் மிக மோசமாக பாதிக்கப்படுபவர்கள் என்று பார்த்தால் அது தமிழர்கள்தான். அதன் நீட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் பாதிக்கப்படும். முதலாவதாக கூட்டமைப்பிடம் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பறிபோகும். மஹிந்த பிரதமராக நிலைபெற்றுவிட்டால், அதற்கு அடுத்தபடியாக கூடுதல் இடங்களை வைத்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியே எதிர்க்கட்சியாக இருக்கும். அதன் தலைவரான ரணில் எதிர்க்கட்சித் தலைவராவார்.
தொடர்புடைய செய்திகள்:
அடுத்ததாக, தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆகுமெனப் பார்க்க வேண்டும். இப்போது இலங்கையில் அரசியல்சாஸன அமைப்பு சபை இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்தத் தருணத்தில்தான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆகவே, புதிய அரசியல் சாஸனத்தில் தமிழர்களுக்குச் சாதகமான அம்சங்கள் இடம்பெறாமல் போகக்கூடும். தேசியக் கேள்வி என்ற தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு வராது. போரின்போது நடந்த குற்றங்கள் குறித்த விசாரணைகள், சமாதான முயற்சிகள் போன்றவை என்ன ஆகும் என்ற கேள்விகளும் இருக்கின்றன. வடகிழக்கில் உள்ள தமிழர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
கே. தற்போது நடந்திருக்கும் நிகழ்வுகளால் இலங்கையில் அரசியல்சாஸன ரீதியான குழப்பமும் சிக்கலும் ஏற்பட்டிருக்கிறது. இது எப்போது முடிவுக்கு வரும்?
ப. இலங்கையில் அரசியல் சட்டம் எழுதுவதென்பது ஒரு வாடிக்கையாகிவிட்டது. ஒரு பொழுதுபோக்கைப் போல அதைச் செய்கிறார்கள். அதேதான் இப்போதும் நடக்கிறது. எப்படி மாலத்தீவில் நடக்கிறதோ, எப்படி நேபாளத்தில் நடக்கிறதோ அப்படித்தான் இலங்கையிலும் நடக்க ஆரம்பித்துள்ளது. அவர்களுக்கு அரசியல் சாஸனத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ பெரிய நம்பிக்கை ஏதும் இல்லை. அரசியல்வாதிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப நடந்துகொள்வார்கள். எல்லாம் அவரவர் வசதிக்கேற்ப செய்வார்கள்.
கே. தற்போது நடந்திருக்கும் நிகழ்வுகளில் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் நேரடித் தலையீடு இருப்பதாக நினைக்கிறீர்களா?
ப. இலங்கை அரசியலின் மீது இந்தியாவும் சீனாவும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், இந்த நிகழ்வில் சீனா, இந்தியாவின் நேரடித் தலையீடு இல்லை. இருந்தபோதும், இந்த நிலைமையைச் சமாளிப்பதில் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் நிச்சயம் தலையிடும். இன்று ஐரோப்பிய யூனியன்கூட இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இலங்கை மீது நமக்கு பெரிய ஆர்வம் உண்டு. ஆகவே நாம் அவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முயல்வோம். அதையே சீனாவும் செய்யும்.
கே. புதிய அரசியல்சாஸன சபை இப்போது விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதில் தமிழர்களுக்கான வாக்குறுதிகள் ஏதாவது இடம்பெற்றிருந்ததா? இப்போதைய மாற்றத்தால் அவை நீக்கப்படுமென நினைக்கிறீர்களா?
ப. பாராளுமன்றத்தில் ஐந்தாம் தேதி நிதி நிலை அறிக்கை குறித்த விவாதமும் அதற்குப் பிறகு அரசியல்சாஸன அவை விவாதமும் நடப்பதாக இருந்தது. இதில் தமிழர்கள் கேட்தற்கு ஒரு படி கீழேதான் கொடுப்பதாக இருந்தது. தமிழர்களைப் பொறுத்தவரை காவல்துறை அதிகாரமும் நிலம் மீதான அதிகாரமும் கேட்டார்கள். அந்த அளவுக்குக் கொடுக்க மாட்டார்கள். அதேபோல, ராணுவத்தின் பிடியில் உள்ள நிலங்களிலிருந்து, படையினர் வெளியேற வேண்டுமென்ற கோரிக்கை இருந்தது. ஆனால், இனி ஒன்றும் நடக்காது. இதுவரை விவாதித்ததை தூக்கிப்போட்டுவிடுவார்கள். மீண்டும் புதிதாக விவாதித்து எழுதுவோம் என்பார்கள். அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த அளவுக்கு ஒத்துழைக்குமெனத் தெரியவில்லை.
இந்த இடத்தில்தான் மற்றொரு அரசியல்வாதி வருகிறார். அவர் டக்ளஸ் தேவானந்தா. ஐந்தாண்டு காலம் ஆட்சியிலிருந்தும், கூட்டமைப்பு எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் வலுவாக முன்வைக்கிறார். மக்களும் விரக்தியோடு இருக்கிறார்கள்.
கே. வடக்கில் உள்ள டக்ளஸ் தேவானந்தா, சி.வி. விக்னேஸ்வரன் போன்றவர்களின் அரசியல் எதிர்காலம் இனி எப்படியிருக்கும்?
ப. சி.வி. விக்னேஸ்வரன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். கூட்டமைப்பினர் அவரை அடையாளம் கண்டு முதல்வராக்கினார்கள். ஆனால், அவர் இன்றைக்கு புதிய கட்சியைத் துவங்கியிருக்கிறார். இதனால் தமிழர்களின் வாக்குகள் சிதறும். டக்ளஸால் கூட்டமைப்பிற்குள் வர முடியாது. அவர் பல வருடங்களாக மஹிந்தவுடன் இருக்கிறார். இதெல்லாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உதவும். சி.வி. விக்னேஸ்வரன் எடுத்த நடவடிக்கை, தனக்கு ஒரு பெயர் இருக்க வேண்டுமென்பதற்காக எடுத்த நடவடிக்கை. அது நிச்சயம் பலனளிக்காது. ஐந்து வருடங்களாக ஆட்சியிலிருந்தும் ஏதும் செய்யாத விக்னேஸ்வரன், கூட்டமைப்பினால்தான் ஒன்றும் செய்யமுடியவில்லையென்பது, கொழும்பிலிருக்கும் அதிகாரிகளால் ஏதும் செய்ய முடியவில்லையென்பது வேடிக்கையாக இருக்கிறது. அவர் கூட்டமைப்பிற்கு திரும்பினால்தான் தமிழர்களுக்கு ஏதாவது பயன் இருக்கும்.
கே. கிழக்குப் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் தற்போது சூழலில் என்ன செய்வார்கள்?
ப. முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரை அவர்கள், யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்களோடு போய் சேர்ந்துவிடுவார்கள். காலகாலமாக அவர்கள் அதைத்தான் செய்துவருகிறார்கள். அதனால்தான் புலிகளோடு முரண்பாடு ஏற்பட்டது. ரவூஃப் ஹக்கீம் இப்போது ரணிலுடன் இருப்பதாக சொன்னாலும் விரைவில் அவர் மஹிந்தவுடன் இணையவே வாய்ப்பு அதிகம்.
கிழக்குப் பகுதியில் இஸ்லாமியர்களின் தொழில்கள் ஏதாவது பெரிதாக வளர்ந்தால், அதைச் சிங்களர்கள் பறிப்பது வழக்கமாக இருந்தது. மஹிந்த ஆட்சியின் கடைசி ஆண்டுகளில், 2013-14ல் பல சிங்களர்கள் இஸ்லாமியர்களின் தொழில்களைப் பறிக்கப் பார்த்தார்கள். அதனால் ஏற்பட்ட அதிருப்தியில்தான் அவர்கள் ரணில் பக்கம் போனார்கள்.
கே. தற்போத நிகழ்வுகள் இந்திய – இலங்கை உறவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துமென நினைக்கிறீர்கள்?
ப. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. மஹிந்த கடந்த மாதம்தான் தில்லி வந்தார். பிரதமரை சந்தித்தார். அவரிடம் என்ன பேசினார் என்பது தெரியாது. வரும் காலத்தில் எனக்கு வாய்ப்பு இருக்கிறதென தெரிவித்திருக்கலாம். என்னிடம் பல முறை அதை அவர் கூறியிருக்கிறார். அவரை கடைசியாக ஆகஸ்ட் 25ஆம் தேதி அவருடைய சகோதரர் சந்திரன் ராஜபக்சேவின் இறுதிச் சடங்கின்போது பார்த்தேன். அப்போதும் அவர் ஜனாதிபதியைப் போலத்தான் தோற்றமளித்தார். அந்த நிகழ்வுக்கு மைத்திரிபால சிறிசேன சென்றார், இலங்கையில் இருந்த தூதர்கள் சென்றார்கள். இலங்கையில் இருந்த முக்கியஸ்தர்கள் அனைவரும் வந்தார்கள். என்னைப் பொறுத்தவரை அவர் ஜனாதிபதியைப் போலத்தான் எப்போதும் இருந்திருக்கிறார்.
இந்தியாவைப் பற்றி அவர் குறை கூறியிருந்தாலும் பிறகு தன் நிலையை மாற்றிக்கொண்டார். ஆகவே இந்திய உறவில் மாற்றம் இருக்காது. ஆனால், சீனா குறித்த பேச்சை இந்தியா எடுக்க முடியாது. உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் என்று அவர் பதிலளிக்கக்கூடும்.