இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமானது நாட்டை சீரழித்த சிறீலங்கா சுதந்திரக்கட்சி, ஐ.தே.க என்ற இரு பெரும்பான்மை கட்சிகளின் பதவிப் போட்டியாகிவிடக்கூடாது.
இவர்களுக்குள் பதவிப் போட்டி ஏற்பட்டால் சிறுபான்மை மக்களை எரி கொள்ளிகளாக்கி குளிர் காய்வார்கள். அது இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு வழி காட்டிவிடும்.
ஆகவே பதவி மோகத்தில் சித்தாந்தங்களையும், மதவாத இனவாத கருத்துக்களையும் எடுத்து நாட்டை படுகுழியில் தள்ளிவிடாது அனைத்துத் தரப்பும் பங்கேற்குமாறு நாட்டின் ஜனநாயகத்தை பேணும்படி ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது.
முதலாவது அரசியலமைப்பை பேணி நடக்க வேண்டும். இரண்டாவது பத்திரிகை சுதந்திரத்தை மீண்டும் அழிக்கும் வேலை செய்தல் கூடாது. பொது தாபனங்கள் செயற்பாடுகளின் இயல்பு நிலைக்கு பங்கம் விளைவிக்க வேண்டாம் என்றும் மேலை நாடுகள் கேட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டனும் இந்த வேண்டுதலை விடுத்துள்ளது. சுமார் 27 நாடுகளின் தூதுவர்கள் ரணில் விக்கிரமசிங்காவை சந்தித்து உரையாடியபோது இக்கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியாஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர் ஸ்தானிகர் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஜனாதிபதியினால் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலை தொடர்பில் விளக்கமளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கி மஹிந்த ராஜபக்ஷ நியமித்தமைக்கான காரணம் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவிக்கவுள்ளார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.
தான் தற்போதைய அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் சில பதவிகளை ஏற்றுகொள்ளப் போவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தியை தான் முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ புதிய பாதுகாப்பு செயலாளராக பதவியேற்றப்போவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த செய்திகளை நிராகரிப்பதாகவும் எந்த சந்தர்ப்பத்திலும் தற்போதைய அரசாங்கத்தில் எந்தவொரு பதவிகளையும் ஏற்கப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்குள்..:
பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த ஈ.எம்.எஸ்.பி. ஏகநாயக்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய குறித்த நியமனம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.