பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதனூடாக நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசியக் முன்னணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை உறுதிப்படுத்தவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்தும் பதவியில் வைத்திருப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதற்கான சந்தர்ப்பத்தினை தடுக்கும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு பாராளுமன்றத்தை ஒத்தி வைக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபித்ததன் பின்னர் நாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர்களான நளின் பண்டார மற்றும் சுஜவ சேனசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அலரி மாளிகையில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,
அலரி மாளிகையை விட்டு நாம் வெளியேற மாட்டோம், சட்டரீதியாக பாராளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபியுங்கள் அதன் பின் நாங்கள் அலரி மாளிகையை விட்டு வெளியேறுகின்றோம்.
பாராளுமன்றத்தை கூட்டாமல் இருப்பது இராணுவ ஆட்சியாக கருதப்படும். இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன ஜனநாயகம் எந்தப் பக்கம் நிலை நாட்டப்படுகின்றதோ அந்தப் பக்கமே அதன் ஆதரவும் இருக்கும்.
தற்போது நாட்டில் இடம்பெறுவது சட்டவிரோதமான அரசியல் செயற்பாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.