இந்தோனேசியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கியது இந்திய கேப்டன் என்பது தெரியவந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த பாவ்யே சுனேஜா என்ற விமானிதான் விமானத்தை இயக்கியுள்ளார் என்று லயன் ஏர்லைன்ஸ் விமானம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி610 என்ற விமானம் இன்று காலை புறப்பட்டது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்தது. விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
விமானம் ஜகார்த்தாவில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்ட விமானம் வானில் பறந்த 13 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. விமானப் பயணத்தின்படி காலை 7.20 மணிக்கு பினாங் நகரை அந்த விமானம் அடைந்திருக்க வேண்டும். ஆனால், விமானம் அந்த நகருக்குச் சென்று சேரவில்லை.
ஜகார்த்தாவின் வடகடல் பகுதியில் உள்ள தன்ஜுங் பிரியோக் எனும் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டது. அங்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, மீட்புப்ப்படையினர், கடற்படையினர் அங்கு விரைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும், ஹெலிகாப்டர் மூலமும் தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன. விமானம் விழுந்த பகுதியில் பயணிகளின் ஹேண்ட் பேக்குகள், அடையாள அட்டைகள், மொபைல் போன்கள், டிரைவிங் லைசன்ஸ் போன்றவை கடலில் மிதப்பதை மீட்புப் படையினர் கண்டனர்.
விமானம் கடலில் 30 முதல் 35 மீட்டர் ஆழத்துக்குள் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுவதால், அதற்கான தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன.
இது குறித்து லயன்ஸ் விமானம் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் முகமது சயாகி கூறுகையில், ”விமானத்தில் பயணித்தவர்களில் யாரும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. இப்போதுவரை விமானத்தில் இருந்து எந்தவிதமான சமிக்ஞையும் இல்லை. நம்பிக்கையோடு தேடுகிறோம். கப்பற்படையினர், மீட்புப்படையினர், இழுவை படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடக்கின்றன. ஆழ்கடல் நீச்சல் அடிப்பவர்கள் மூலம் தேடுதல் பணிகள் நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்தோனேசியா லயன்ஸ் விமானத்தை இயக்கிய கேப்டன் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. டெல்லியின் மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்த பாவ்யே சுனேஜா என்பது தெரியவந்துள்ளது. இதை விமானம் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த விமானி பாவ்யே சுனேஜா பைலட் பயிற்சியை முடித்து, எமிரேட்ஸ் விமானத்தில் பயிற்சி பைலட்டாகப் பணியாற்றியவர். அதன்பின் கடந்த 2009-ம் ஆண்டு பெல் ஏர் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் இருந்து விமானம் ஓட்ட லைசன்ஸ் பெற்றுள்ளார்.
லயன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த 2011-ம் ஆண்டு சுனேஜா பணிக்கு சேர்ந்துள்ளார்.