தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இன்று வவுனியாவில் ஒன்றிணைந்த அரசியல் கட்சிகளின் பொது அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மலைய மக்களின் சம்பளம் 1000 ரூபா வழங்கப்படவேண்டும் எனக்கோரி இடம்பெற்ற மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கின் பெரும் ஆதரவுடன் இந்த அரசாங்கம் எவ்வாறு வந்திருந்ததோ அதே போன்றுதான் இந்த மலையக மக்களும் அதரவு வழங்கியிருந்தனர். ஆனால் இன்று நல்லாட்சி அரசாங்கமும் நிலைதடுமாறி ஒரு நெருக்கடியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆகவே இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. இன்று மகிந்த ராஜபக்ஷ பிரதமராக வருவதற்கு காரணமானவர்கள் எதிர்க்கட்சி தலைவரும், ரணில் விக்கிரமசிங்கவும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனாவுமே ஆகும். இதற்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையே காரணமாகும். இந்நிலையில் சுமந்திரன் போன்றவர்கள் அரசியல் தீர்வு வராவிடிவின் இந்த அரசியல் அரங்கில் இருந்து ஒதுங்குவதாக தெரிவித்திருந்தார். ஆகவே அதனை நிறைவேற்றிக்கொள்ள இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த அரசியல் அமைப்பை உருவாக்குவதாக சொன்ன சுமந்திரன் இந்த நல்லாட்சி அரசாங்கம் பிளவு பட்டு போய்யுள்ள இந்த நிலையில் அவருடைய வாக்கினை நிறைவேற்றி கொள்ளும் முகமாக அரசியலில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்.
எங்களுடைய மத்திய குழு கூடி இந்த நாட்டிலே தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பாக நாங்கள் என்ன நிலைப்பாட்டை எடுப்பது தொடர்பாக ஆரயவுள்ளோம். எங்களை பொறுத்தவரை இந்த இரண்டு பிரதான கட்சிகளும், தமிழ் மக்களுக்கு கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும், நிறைவேற்றாத ஒரு கால கட்டத்திலேயே இருக்கிறோம். ஆகவே இவர்களுக்கு நிபந்தனை விதித்தோ, விதிக்காமலோ எதையும் செய்யப்போவதில்லை.
எதிர்வரும் தை மாதமோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பாராளுமன்ற தேர்தலுக்கோ அல்லது மாகாணசபை தேர்தலுக்கோ செல்ல இருக்கிறார்கள். ஆகவே நாம் ஒரு தேர்தலை நோக்கி செல்ல இருக்கும் இவர்களிடம் இனி எதையும் எதிர்பார்க்க முடியாது.
கடந்த மூன்று வருட காலத்திலே இந்த அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதை பெற்றுக்கொள்ள முடியாததற்கு காரணம் எதிர்கட்சி தலைவர் சம்மந்தனும் அவர் சார்ந்த தமிழரசு கட்சியும் தங்களுடைய கட்சி நலனையும், பதவி நலனையும் பதவிகளை காப்பாற்றுவதற்காக தமிழ் மக்களுக்கு வழங்கிய அத்தனை வாக்குறுதிகளையும் காற்றிலே பறக்கவிட்டுள்ளனர்.
குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைப்பதற்காகதான் இந்த அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வந்துள்ளார். ஆனால் இன்று அவருடைய எதிர்க்கட்சி பதவியும் பறிபோயிருக்கிறது. இந்நிலையிலேயே எமது மத்திய குழு கூடி ஒரு முடிவெடுக்கவுள்ளது.
நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி விட்டோம். இதற்கான காரணம் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படாமையும், தங்களுடைய கட்சி நலன் சார்ந்தே அவர்கள் சென்று கொண்டிருப்பதனாலும் இது மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம் என்பதாலேயே நாங்கள் வெளியேறியிருக்கிறோம்.
2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கினைப்பு குழு கூட்டத்தில் நாங்கள் தீர்க்க தரிசனமாக ஒரு விடயத்தை தெரிவித்திருந்தோம், அதாவது காலம் கடந்தால் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. அதிலும் முக்கியமாக ஒரு விடயத்தை தெரிவித்திருந்தேன்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை மின்சார கதிரையில் இருந்து காப்பாற்றுவதாக சொன்ன ஜனாதிபதிதான் முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் பதிவிக்கு கொண்டுவருவதற்கான வேலையை செய்து கொண்டு இருக்கிறார். ஆகவே நாங்கள் அரசாங்கத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு போக வேண்டும். எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என மேலும் தெரிவித்திருந்தார்.