விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் சுமார் 80 நாடுகளில் 1200-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளதால், தங்களுடைய தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தும் பணிகளையும் தொடங்கியுள்ளார்கள்.
தமிழகத்தில் பட வெளியீட்டுக்கு முன்பே 200 கோடி வியாபாரம் உள்ளிட்ட பல சாதனைகளை ‘சர்கார்’ நிகழ்த்தியுள்ளது. அதைப் போலவே சுமார் 80 நாடுகளில், 1200 திரையரங்குகளுக்கும் மேல் ‘சர்கார்’ படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியுள்ள ஏபி குரூப்ஸ் மற்றும் டி ஃபோக்கஸ் நிறுவனம் இதனை முடிவு செய்திருக்கிறார்கள்.
போலாந்து, மெக்சிகோ, நியூசிலாந்து, உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் ‘சர்கார்’ படத்தை வெளியிட இருக்கிறார்கள். இதற்கு முன்பாக வெளியான விஜய் படங்களை விட உலக நாடுகளில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் விஜய் படம் என்ற பெருமையை ‘சர்கார்’ பெறவுள்ளது. ‘சர்கார்’ படத்தின் கதை சர்ச்சை, இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு உள்ளிட்டவற்றால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.