ஆன்லைன் வர்த்தகத்தில் பல கோடி ரூபாய் குவித்து உலக பணக்கார்ர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து கோலச்சி வரும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸுக்கு இரண்டு நாளில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அமெரிக்க பணக்காரர்கள் பலரும் தற்போது ஆடிபோயுள்ளனர்.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். உலகின் மிகப்பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிளுக்கு அடுத்த படியாக அமேசான் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராக ஜெப் பெசோஸ் இருந்து வருகிறார். இவர் அமேசான் நிறுவனத்தை 1994-ம் ஆண்டு தொடங்கினார்.
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் இந்த ஆண்டு முதலிடம் பிடித்தார். இவரின் மொத்த சொத்து மதிப்பு141.9 பில்லியன் டாலர். இதுவரை முதலிடம் பிடித்து வந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்த தடவை 2-வது இடத்துக்கு தள்ளப்ட்டார். இவரது சொத்து மதிப்பு 92.9 பில்லியன் டாலர்.
இந்தநிலையில், ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு இரண்டு நாட்களில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகளில் ஐடி நிறுவன பங்குகள் இரண்டு நாட்களாக பெரும் சரிவை சந்தித்தன.
இதில் ஜெப்பெசோஸ் நிறுவனங்களின் பங்குகளும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. சுமார் 19.2 பில்லியன் டாலர்ககள் அளவுக்கு அவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
புளூம்பெர்க் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் 500 பேரின் சொத்து மதிப்புகள் 2 நாட்களில் ஒட்டுமொத்தமாக 99 பில்லியல் டாலர் வரை சரிந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்துக்குப் பின் பெசோஸ் சொத்து மதிப்பு மிக அதிகமான அளவு இழந்துள்ளது. பெசோஸுக்கு அடுத்தபடியாக தொழிலதிபர் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலர் சரிந்ததுள்ளது.
பில்கேட்ஸ், மெக்ஸிகோவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு உரிமையாளர் கார்லோஸ் சிலிம் உள்ளிட்டோரின் பங்குகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன. இதனால் அவர்களது சொத்து மதிப்பும் குறைந்துள்ளது.