எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தனை மாற்றுவதற்கு எவ்விதத் தீர்மானங்களும் கிடையாது என ஐ. ம .சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிரணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 54 சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் எதிரணியில் இருக்கையில், 16 பேர் கொண்ட தமிழ் கூட்டமைப்பிற்கு
எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தற்பொழுதும் அதே வாதத்தின் பிரகாரம் எதிரணியில் ஐ.தே.க தொகை கூடுதலாக இருந்தாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவி மாற்றப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரேமதாஸவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்பட்ட போதும் டியூ குணசேகர கோப் அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போதும் ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்கமைய பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.சிலர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ளனர்.
வரலாற்றில் முதற் தடவையாக பல சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் அமைச்சு பதவி ஏற்காது இருக்க ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, எரிபொருள் சூத்திரத்தை இனி பயன்படுத்தாதிருக்கவும் தீர்மானித்துள்ளதாக டலஸ் அழகபெரும இதன்போது கூறியுள்ளார்.அடுத்த 10 ஆம் திகதியின் பின்னர் இந்த சூத்திரம் இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
———-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் சபாநாயகர் கருஜெயசூரியவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று தற்போது இடம்பெறுகின்றது.
பாராளுமன்ற அமர்வினை உடனடியாக கூட்டுமாறு கோருவதற்காகவே சபாநாயகர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதிக்கு இரண்டாவது கடிதத்தை சபாநாயகர் அனுப்பியுள்ள நிலையிலேயே இன்றைய சந்திப்பு இடம்பெறுகின்றது.
ஜனாதிபதிக்கான இரண்டாவது கடிதத்தில் 125 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும் என தெரிவிக்கின்றனர் என சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார்.
சபாநாயகர் என்ற அடிப்படையில் நான் அதனை செவிமடுக்கவேண்டும் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே இரண்டாவது கடிதத்தை சபாநாயகர் அனுப்பிவைத்திருந்தார்.