முறைகேடுகள் இன்றி மக்களின் எரியும் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு நாம் செயலாற்ற வேண்டும் எனத் தெரிவித்த மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்காக உத்தியோகத்தர்களுக்கு அவசியமான ஒத்துழைப்பையும் வழிகாட்டலையும் உதவிகளையும் வழங்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (31) தனது அமைச்சில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து உரை நிகழ்த்துகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் மக்களுக்கு உரிய முறையில் சேவை ஆற்றப்படாததன் காரணமாக மீண்டும் ஒருமுறை எனக்கு இந்த வாய்ப்பு உருவாகி இருப்பதுடன் இச்சந்தர்ப்பத்தில் எமது மக்களை ஏமாற்றத்திற்கு அல்லது அசௌகரியத்திற்கு உள்ளாக்காமல், உரிய நேரத்தில் உரிய சேவையை வழங்க வேண்டும்.
மக்களுக்கு அவசியமான சேவைகளை வழங்கும்போது உத்தியோகத்தர்களுக்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படுமாயின், அவ்வாறான எல்லாப் பிரச்சினைகளையும் நிவர்த்திசெய்வதற்கு முன்வருவேன். அவசியமான எந்தவொரு வேளையிலும் பிரச்சினைகளை முன்வைக்க தன்னிடம் வரலாம் எனவும் தெரிவித்தார்.