சூர்யாவின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே.’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’. ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.
ஜெகபதி பாபு, பாலா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்தப் படத்தில் நடித்துவரும் அதேநேரத்தில், கே.வி.ஆனந்த் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் சூர்யா. லண்டனில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, தற்போது வட இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட் செய்கிறார். மோகன்லால், ஆர்யா, சயீஷா, சமுத்திரக்கனி, பொமன் இரானி, சிராக் ஜானி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்தியாவின் பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடிக்க, அவருடைய சிறப்புப் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக சூர்யா நடிக்கிறார் என்கிறார்கள்.
இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, ஹரி இயக்குகிறார். இது ‘சிங்கம்’ படத்தின் நான்காவது பாகம் கிடையாது. புதிய கதைக்களத்துடன் இருவரும் களம் இறங்குகின்றனர்.