தமிழன் கண்ட தங்கமான சிந்தனையொன்று தரணியை வென்றது.
பிரான்சின் தலைநகர் பாரீசில் எழுந்து நிற்கும் இரும்புக் கேடர்களால் உருவாக்கப்பட்ட ஐபிள் கோபுரம் இன்றுவரை ஓர் உலக அதிசயமாக போற்றப்படுகிறது. இது 300 மீட்டர் உயரம் கொண்டதாகும்.
இந்த ஐபிள் கோபுரத்தை பார்த்தபடி ஐரோப்பாவை வலம் வந்த இளைஞன்தான் டென்மார்க்கில் வாழும் ஆனர்ஸ் கொல்க் போவுல்சன் என்ற இளைஞனாகும். இன்று அவர் ஐபிள் கோபுரத்தைவிட 20 மீட்டர்கள் அதிக உயரம் கொண்ட மாபெரும் அடுக்குமாடி கட்டிடமொன்றை டென்மார்க்கில் உள்ள பிறண்டா என்ற இடத்தில் அமைக்க இருக்கிறார்.
ஓர் உயரமான கோட்டுக்கு பக்கத்தில் அதைவிட சிறிது உயரமான இன்னொரு கோட்டை வரைந்தால் முதல் இருந்த பெரிய கோடு சிறியதாகிவிடுமல்லவா..?
இப்படி ஓர் இரு கோடுகள் தத்துவத்தால் சின்னஞ்சிறிய தனது நாட்டுக்கு பென்னம் பெரிய புகழை தேடித்தரவுள்ளார் இந்த டேனிஸ் தொழல் அதிபர்.
இவருடைய கட்டிடத் தொகுதி சாதாரணமானதல்ல அது அமைவுபெற இருக்கும் நிலத்தின் பரப்பளவே 88 உதைபந்தாட்ட மைதானங்களை இணைத்த பெரும் பரப்பளவு கொண்டதாகும் அதாவது 6,45,000 சதுர மீட்டர்கள் கொண்ட நிலப்பரப்பில் ஆரோகணித்து எழுந்து வரப்போகிறது இந்த மாடிக்கட்டிடம்.
யார் இந்த மகத்தான சாதனை மனிதர்..? அறிய மனம் ஆவல் கொள்கிறது.
கடந்த இருபது வருடங்களுக்கு முன்னர் டென்மார்க்கிலேயே இவரை யாரென்று தெரியாது. இன்று ஆடை விற்பனைத் துறையில் உள்ள உலகப் பெரும் ஜாம்பவான்கள் எல்லாம் கண்டு கதிகலங்கும் உலகப் புகழ் கொண்ட பகாசுர சாதனையாளனே இந்த டேனிஸ் இளைஞனாகும்.
பெஸ்ற் செலா என்ற பெயர் கொண்ட இவருடைய நிறுவனம் அதி நவீன தைத்த ஆடைகளை விற்பனை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டபோது, போட்டி நிறைந்த இந்தத் துறையில் இவர் தோற்று ஓடிவிடுவார் என்று கேலியாக பார்த்தவர்கள் பலர்.
பெஸ்ற் செலா என்றால் சிறப்பாக பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்பது கருத்தாகும். இதுபோலத்தான் டென்மார்க்கின் தலைநகரான கோப்பன்கேகனின் பெயரும் பொருட்களை வாங்கும் துறைமுகம் என்ற பொருள் கொண்டதாகும்.
டென்மார்க் தலைநகர் வாங்கும் துறை முகமாக இருக்க இவரோ அதைவிட மேலும் ஒரு படி சிறப்பாக எண்ணி விற்கும் நிறுவனம் என்ற பெயரைச் சூட்டியது அவருக்கு ஓர் அதிர்ஷ்டகரமான பெயராக மாறியது. ஆம் காலம் இந்த பெயருடன் வரும் ஒருவனுக்காக நெடுங்காலமாக காத்திருந்திருக்கிறது போலும்.
கொஞ்சம் நில்லுங்கள் இது எங்கோ கேட்ட கருத்துப் போல இருக்கிறதே என்கிறீர்களா.. ஆம் சங்கப்பாடல்களை படித்திருந்தால் கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள்.
இந்தக் கருத்தானது ஒரு காலத்தில் டேனிஸ் மக்கள் தமிழர்களுடன் கொண்ட வரலாற்று புகழ் மிக்க உறவுமுறையோடு கலந்து நிற்கிறது என்றால் அது மிகையான கூற்றல்ல. தமிழ் நாடு தரங்கம்பாடியில் உள்ள டேனிஸ் காலனித்துவத்தின் கோட்டை இன்றும் இன்றுவரை இதற்கு சாட்சியமாக இருக்கிறது.
பழைய காலத்தில் டென்மார்க் தலைநகரமான கோப்பன்கேகன் போல தமிழகத்தில் கண்ணகி கோவலன் கதையில் வரும் பூம்புகார் துறைமுகமும் இருந்திருக்கிறது. அக்காலத்தே பாடப்பட்ட பட்டினப்பாலை என்ற சங்கத்தமிழ் நூலானது ஒரு மாபெரும் வர்த்தகக் கொள்கையை உலக மக்களுக்கு போதித்தது. அதை தமிழர்கள் எந்தளவு தூரம் புரிந்து நடந்தனர் என்பது தெரியாது. ஆனால் டேனிஸ் மக்களின் பொருளாதாரக் கொள்கைகளிலும் செயற்பாடுகளிலும் பட்டினப்பாலையின் வர்த்தகக் கொள்கை மிகச்சிறப்பாக பிரதிபலிக்கக் காண்கிறோம்.
கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறை கொடாது வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதே பட்டினப்பாலை தரும் பாடமாகும். அதாவது பொருட்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்து விற்று கொள்ளை இலாபம் ஈட்டுதல் கூடாது. அதுபோல கொடுக்கும் போதும் குறைவாகக் கொடுக்கக் கூடாது தரமாகவும், கூடவே நிறைவாகவும் கொடுக்க வேண்டும். அதுவே வர்த்தக வெற்றிக்கு அவசியமாகும் என்கிறது.
இதே கொள்கையைத்தான் இந்த டேனிஸ்காரரின் பெஸ்ற் செலா நிறுவனத்திலும் காண்கிறோம். இவர்கள் விற்கும் உடைகளை வாங்கும்போது பட்டினப்பாலையை படித்திருந்தால் அதன் வரிகள் அக்கணமே நம் ஞாபகத்திற்கு வந்துவிடும். உண்மையில் நவீன டிசைனில் எங்கும் இல்லாத அழகு.. அதேவேளை மற்றய நிறுவனங்களின் உடைகளை விட அதிக காலம் பாவிக்கும் நேர்த்தி, வாங்கினால் மனநிறைவு தரும் சேவை, தரத்திற்கு நியாயமான விலை என்பன இவருடைய நிறுவனத்தின் வெற்றியை வானுயரப்பறக்க வைத்தது.
அவ்வளவு போதுமே.. நிறுவனம் பிய்த்துக் கொண்டோட ஆரம்பித்தது. உலகம் முழுவதும் இவருடைய கடைத்தொகுதிகள் பரவி சீனாவின் பெரும் சந்தையையும் கைப்பற்றிய போது உலகமே இவரை திரும்பிப் பார்த்தது.
ஓர் அமேசான், அலிபாபா போல டென்மார்க் பெஸ்ற் செலா நிறுவனமும் சாதனை படைக்க ஆரம்பித்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஸ்கொட்லாந்தில் யாரோ ஒரு டேனிஸ் இளைஞர் காணிகளை ஏக்கர் ஏக்கராக வாங்கிக் குவிக்கிறார் என்ற செய்தி வெளியானது. திரும்பிப் பார்க்கிறோம் பெஸ்ற் செலா நிறுவன அதிபர் ஆனர்ஸ் கொல்க் போவுல்சன் வெற்றிக்கொடி அங்கே பறந்து கொண்டிருக்கிறது.
இருபது வருடங்கள்தான் ஐபிள் கோபுரத்தைவிட 20 மீட்டர்கள் அதிக உயரத்தில் ஒரு மாடியை கட்டுவதாக அறிவிக்குமளவுக்கு கடைத்தொகுதிகள், வாடகை வீடுகள், காரியாலயங்கள், உணவு விடுதிகள் என்று பல வகையான தேவைகளை பூர்த்தி செய்யும் கட்டிடமாக எழுந்து, தரையையும் முகிலையும் தொட்டு நிற்கப்போகிறது இவருடைய வானுயர்ந்த கோபுரம்.
இந்தப் புகழ் மிகு கட்டிடத்திற்கான வேலைகள் 2019ம் ஆண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்க இருக்கின்றன, 2023ம் ஆண்டு நிறைவடையும். ஒரு தனிமனிதன் தனக்குள் பிரமாண்டமான கற்பனைகளை வளர்த்தெடுத்தால் காலமும் இயற்கையும் அதற்கான கதவுகளை திறக்கும்.
அவ்வளவுதானா இப்படியொரு காரியத்தை பல நாடுகளில் செய்ய முற்பட்டால் இலஞ்சம் கொடுத்தே அழிந்துவிட வேண்டியதுதான். அந்த அவலம் மனித கற்பனையை முனை மழுங்கச் செய்துவிடும்.
ஆனால் டென்மார்க் அரசியல் சமுதாய கட்டமைவோ இந்த இளைஞனுக்கு உலகத்தில் மகிழ்ச்சியான ஒரு நாட்டையும், உலகத்திலேயே ஊழல் குறைந்த ஒரு நாட்டையும் கொடுத்து கற்பனையை வளர்க்கவும், அதை செயற்படுத்தவும் வழி காட்டியதால் இந்த அபார சாதனையை எட்டித்தொட்டுள்ளார் ஆனர்ஸ் கொல்க் போவுல்சன் என்ற சாதனையாளர்.
உடலுக்கு உரம் போடுவது போல மனதிற்கும் உரம் போட்டால் நல்ல மனதை வளர்த்து கற்பனையை மேலோங்கச் செய்து புகழ் மனிதர்களாகிவிடலாமே.
அந்த அழகான கற்பனையை தனது தலைமையில் பல்லாயிரம் பணியாளர்களை அமர்த்தி வர்த்தக சாம்ராஜ்யமொன்றை உருவாக்கினார்.
நாளாவட்டத்தில் உலகத்தை மேடையாக்கி இன்று வானத்தின் முகில்களை தாண்டி சிகரங்களை தொட்டுள்ளார். ஒவ்வொரு வாழத் துடிக்கும் இளைஞரும் இவரை தேடிப்படித்து வானத்தை வில்லாக வளைக்க வேண்டும்.
வழி காட்டி வேண்டுமா..? உலகத்தை வெல்ல தமிழன் எழுதிய ஒரு பட்டினப்பாலையே போதுமே..?
உங்கள் நம்பிக்கையின் அளவுதான் உங்கள் வெற்றியின் அளவையும் தீர்மானிக்கிறது.. பழமொழி
அலைகள் 29.10.2018