இலங்கை சிறையில் உள்ள தமிழர்கள் அனைவரும் விடுதலை செய்ய ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேயின் அரசியல் மற்றும் பொருளார கொள்கை, அதிபர் சிறிசேனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அவர் மீதான கொலை சதியையும் ரணில் கண்டுக்கொள்ளவில்லை.
இதனால் ரணில் விக்கிரமசிங்கேயை பிரதமர் பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26ம் தேதி நீக்கினார். புதிய பிரதமராக ராஜபக்சேயை நியமித்தார். பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் ராஜபக்சேயை பிரதமராக நியமித்தது சட்டவிரோதம் என ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ் தேசிய கூட்டணி கட்சியும் கூறின. இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுவதாக இருந்தது. ஆனால் ராஜபக்சே தனது பெரும்பான்மைக்கு ஆதரவு திரட்டும் வகையில் நாடாளுமன்றத்தை 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பெரும்பான்மை எம்.பி.க்களை வைத்துள்ள ரணில் விக்ரமசிங்கே, நாடாளுமன்றத்தை உடனே கூட்டி பிரச்னை தீர்வு காண வேண்டும் என சபாநாயகர் கரு.ஜெயசூர்யாவை வற்புறுத்தி வருகிறார். ஆனால், நாடாளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் அதிபரிடம் மட்டுமே உள்ளதால், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கிடையே, ராஜபக்சே மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரணில் விக்ரமசிங்கே கொண்டு வந்துள்ளார்.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்க முக்கிய கட்சியான தமிழ் தேசிய கூட்டணி முடிவு செய்துள்ளதாக இக்கட்சியின் எம்.பி விளந்திரையன் கூறியுள்ளார். 225 உறுப்பினர்கள் உள்ள இலங்கை நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு 103 எம்.பிக்களின் ஆதரவு உள்ளது. ராஜபக்சேவுக்கு 100 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது என கூறப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டணியில் உள்ள 16 எம்.பி.க்கள் உட்பட மீதமுள்ள 22 எம்.பிக்கள் ராஜபக்சேக்கு எதிராக வாக்களிப்பர் என கூறப்படுகிறது. ஆனால் தமிழ் தேசிய கூட்டணியில் இருந்து 4க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் ராஜபக்சேவுடன் சேர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழின மக்களின் நீண்டகால கோரிக்கையான இலங்கை சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதன் மூலம் தமிழ் எம்.பி.க்கள் ஆதரவைபெற ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை ராஜபக்சேவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்க்கும் வகையில் பெறுமதியான கலந்துரையாடல்களை உருவாக்க எமது தரப்பு தயாராக உள்ளது. நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா மற்றும் பிரதமர் ராஜபக்சே ஆகியோர் தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர் என நாமல் ராஜபக்சே பதிவிட்டுள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டில் இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான உச்சகட்ட போர் முடிவடைந்த பின்னர் சரணடைந்த பல்லாயிரம் தமிழர்களையும், பின்னர் அரசின் தேடுதல் வேட்டையில் பிடிபட்ட பலரையும் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் ராஜபக்சே அரசு முன்னர் அடைத்து வைத்தது. எவ்வித விசாரணையுமின்றி இப்படி பல ஆண்டுகாலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை முந்தைய ராஜபக்சே அரசும், பின்னர் வந்த மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான அரசும் நிராகரித்து வந்துள்ளது, குறிப்பிடத்தக்கது