மஹிந்த அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்க்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. அந்த முடிவு எடுக்கப்பட்டதன் பின்னணி, ராஜபக்ஷேவை ஆதரிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.
கே. மஹிந்த அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவுசெய்திருக்கிறது. இந்த முடிவின் பின்னணி என்ன?
ப. பிரதமரை நீக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை. முதலில் இருந்தது; 19வது திருத்தச் சட்டத்திற்குப் பிறகு அந்த அதிகாரமில்லை. பிரதமராக இருந்தவரை ஜனாதிபதி இப்படி நீக்கியது தவறு. பிரதமர் முறையாக நீக்கப்பட்டால்தான், வெற்றிடம் ஏற்பட்டு புதிய பிரதமரை நியமிக்கலாம். வெற்றிடம் ஏற்படாமல் புதிய பிரதமரை நியமித்திருக்கிறார். பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருக்கிறார். இடைக்காலத்தில் பலவிதமான கெடுபிடிகள் நிலவுவதை நாங்கள் அறிகிறோம். பிரதமராக பதவியேற்பவர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை பெற வேண்டியது அவசியம். ஆகவே இதனை நாங்கள் கவனமாக பரிசீலித்து, இந்த செயல்பாடுகளை நாங்கள் ஏற்க முடியாது என்று முடிவெடுத்தோம். பிரதமரை நீக்கியது தவறு; புதிய பிரதமரை நியமித்தது தவறு என்பதை வைத்து, மஹிந்த அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால், மேலே சொன்ன அடிப்படையில் செயல்படலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.
கே. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமரை நீக்கிய பிறகு, நீங்கள் அவரை சந்தித்துப் பேசினீர்கள். என்ன பேசினீர்கள்?
ப. அந்த சந்திப்பின்போது அரசியல் தீர்வு உட்பட பல விஷயங்களைப் பற்றிப் பேசினேன். இதைப் பற்றியும் பேசினேன். எங்கள் கருத்தைத் தெரிவித்தோம். அவ்வளவுதான்.
கே. இதற்குப் பிறகு மஹிந்த ராஜபக்ஷேவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினீர்கள். அப்போது அவர் உங்களுடைய ஆதரவைக் கோரியதாகத் தெரிகிறது..
ப. ஆம். அவர் எங்களுடைய ஆதரவைக் கோரினார். ஆதரவைத் தருவது கடினமாக இருக்கும் என்று சொன்னேன். நடந்தது தவறு என்பது எங்களுடைய கருத்து. இருந்தபோதும் அரசியல் தீர்வு தொடர்பாக உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் முன்வைப்பதாக இருந்தால், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி நாங்கள் ஒரு முடிவுக்கு வரலாம் என்று சொன்னேன். அரசியல் தீர்வு தொடர்பாக ஒரு தீர்மானத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்; எவ்விதம் நடைமுறைப்படுத்துவீர்கள்; எந்த கால வரம்புக்குள் செயல்படுத்துவீர்கள் என்பதை எழுத்து மூலமாகத் தந்தால் ஆதரவு தருவது குறித்து பரிசீலிப்போ் எனக் கூறினேன். தான் மீண்டும் தொடர்பு கொள்வதாகச் சொன்னார். ஆனால் தொடர்புகொள்ளவில்லை.
கே. அரசியல் தீர்வு என்றால், நீங்கள் என்ன கேட்டீர்கள் என்பதைச் சொல்ல முடியுமா?
ப. நம்பிக்கையுடைய உறுதியான அதிகாரப் பகிர்வு, பிராந்தியங்களின் அடிப்படையில் அளிக்கப்படும் இந்த அதிகாரப் பகிர்வு மீளப் பெற முடியாததாக இருக்க வேண்டும். ஒரு பிராந்தியமோ, மாகாணமோ அந்த அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். மத்திய அரசு அதில் தலையிடக்கூடிய நிலை இருக்கக்கூடாது. மக்களின் நாளாந்த தேவைகளை, மக்கள் தேர்வு செய்யும் பிரதிநிதிகளின் ஊடாக, ஒரு பிராந்திய அமைச்சரவையின் ஊடாக, பிராந்திய சபையின் ஊடாக வழிவகுக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்வுத் திட்டம்.
கே. சமீபத்தில் ஜனாதிபதி பேசும்போது, வடக்கு – கிழக்கு இணைக்கப்பட மாட்டாது, ஃபெடரல் ஆட்சி முறை இனி சாத்தியமில்லையென்றெல்லாம் கூறியிருக்கிறார்.
ப. இது ஏற்புடையதல்ல. இது பேசித் தீர்க்க வேண்டிய விஷயம். அவர் சொன்னதை ஏற்கவில்லை. பார்க்கலாம்.கே. ஐக்கிய தேசியக் கட்சி உங்களிடம் ஆதரவைக் கோரியபோது, மஹிந்தவிடம் கேட்டதுபோல அவர்களிடம் வாக்குறுதி ஏதேனும் கேட்டீர்களா?
ப. ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, பாராளுமன்றத்தில் தற்போது ஒரு நடைமுறை நடைபெற்று வருகிறது. புதிய அரசியல் சாஸனத்தை உருவாக்க, நாடாளுமன்றம் ஒரு அரசியல் சாஸன சபையாக மாற்றப்பட்டு அதை விவாதித்துவந்தது. நடவடிக்கை குழு, உப குழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கிறார்கள். ஆகவே இது தொடர்பாக பல விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி அரசைப் பொறுத்தவரையில் ஒரு காரியம் நடந்து வருகிறது. அதைப் பற்றி எங்களுக்குத் தெரியும் என்பதால், புதிதாக எதையும் பேச வேண்டிய தேவை ஏற்படவில்லை.
கே. ரணில் ஆதரவைக் கோரியபோது நீங்கள் என்ன சொன்னீர்கள்?
ப. நாங்கள் நபர்கள் சார்ந்து முடிவெடுக்கப்போவதில்லை. எங்களைப் பொறுத்தவரை அரசியல் சாஸனம் மீறப்பட்டுள்ளது. அதைக் கருத்தில்கொண்டுதான் முடிவெடுப்போம் என்று சொன்னேன்.
கே. பாராளுமன்றம் கூடுவது தள்ளிப்போகும் நிலையில், உறுப்பினர்கள் இடம் மாறுவது வேகமாக நடந்துவருகிறது..கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு உறுப்பினரே மஹிந்தவுக்கு ஆதரவாக மாறியிருக்கிறார்.
ப. பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம் மாறுவது உண்மை. கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் இடம் மாறியிருக்கிறார். அப்படிச் செய்வாரென நாங்கள் நினைக்கவில்லை. அது மிகவும் கேவலமான செயல். ஆனால், அவரைப் பற்றிய சந்தேகங்கள் இருந்தன. அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுப்போம்.
கே. மஹிந்தவின் நம்பிக்கை கோரும் தீர்மானம் தோற்றுவிட்டால் என்ன நடக்கும்?
ப. அவர் நியமிக்கப்பட்டது பிழையென்றாகிவிடும். முந்தைய நிலையே நீடிக்கும்.