பாராளுமன்றம் நவம்பர் 14 ஆம் திகதி கூடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார். இதற்கான அரச வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவிநீக்கம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தார்.
இதற்கு அடுத்த நாள், ஒக்டோபர் 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நவம்பர் 16 ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை முடக்கிவைப்பதாகவும் அறிவித்தார்.
ஆனால், உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டி மஹிந்த தனது அரசு மீதான நம்பிக்கையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிவந்தன. ஆங்காங்கே இது தொடர்பான போராட்டங்களும் நடந்து வந்தன.
இந்த நிலையில் பாராளுமன்றம் மீண்டும் நவம்பர் 5 ஆம் திகதி கூட்டப்படலாம் என்ற பேச்சுகள் அடிப்பட்டன. அதற்குப் பிறகு, பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றம் நவம்பர் 7 ஆம் திகதி அன்று கூட்டப்படலாம் எனத் தெரிவித்தார். ஆனால், இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.
இதை அடுத்து மஹிந்த, தனக்குத் தேவையான பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டும் பொருட்டே பாராளுமன்றம் கூட்டப்படுவது தள்ளிப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இந்த நிலையில் தான், பாராளுமன்றம் நவம்பர் 14 ஆம் திகதி காலை 10 மணிக்கு கூட்டப்படும் என்ற அறிவிப்பை ஜனாதிபதி நேற்று இரவில் வெளியிட்டார்.
முந்தைய அறிவிப்பின்படி நவம்பர் 16 ஆம் திகதி வரை பாராளுமன்றம் முடக்கப்பட்டிருந்தது. இப்போதைய அறிவிப்பின் மூலம், இரு நாட்கள் முன்னதாக கூட்டப்படுகிறது.