டென்மார்க் சாகித்திய சுருதிலயா இசைக்கல்லூரியின் 20 வது ஆண்டு விழாவில் பேசிய ஆசிரியர் கி.செ.துரை சங்கீத இசையரசிகளின் கணவன்மாருடைய 1500 வருட கால பாத்திர வளர்ச்சி பற்றிய கருத்தொன்றை கூறினார்.
தமிழில் சங்கீத மேதைகளாக இருந்த பெண்களில் முதல் பெரும் இசையரசியாக நாம் காரைக்கால் அம்மையாரையே காண்கிறோம். அவரைப் போல தெய்வமாக மதிக்கப்படாவிட்டாலும் சென்ற நூற்றாண்டில் ஐ.நா சபைவரை தன் இசையால் தொட்டவர் இசையரசி எம்.எஸ் சுப்புலட்சுமியாகும்.
கரைக்கால் அம்மையாரின் கணவனான தனதத்தன் முதல் எம்.எஸ் சுப்புலட்சுமியின் கணவரான சதாசிவ ஐயர் வரை சுமார் 1500 வருடகால சங்கீத மேதைகளின் கணவன் பாத்திரங்களை எடுத்தால் பெண்களின் சங்கீதத்தை ஏற்றுக் கொள்ளும் ஆண்களின் போக்கையும், ஆண்கள் உலகத்தால் பெண்கள் சந்தித்த அனுபவங்களையும் நாம் தெளிவாகவே காண முடியும்.
காரைக்கால் அம்மையார் பதிகங்களை பாடியவர் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தை பாடியவரும் அவரே. தனது இசை ஆற்றலால் இறைவனிடம் மாங்கனியையே பரிசாக பெறுமளவிற்கு தெய்வீக இசை வளம் கொண்டவர்.
காரைக்கால் அம்மையாருடைய ஆற்றலை கண்டதும் கணவனான தனதத்தன் செய்த முதல் வேலை அவரை விட்டுவிட்டு தலை தெறிக்க ஓடி, இசை ஞானமற்ற ஒரு சாதாரண பெண்ணை திருமணம் செய்ததுதான்.
இத்தகைய செயலால் கணவனையே தெய்வமாக கண்ட அம்மையார் சமுதாய வீதியில் பலத்த சங்கடங்களை சந்தித்தார். ஓர் இசையரசி கணவன் இல்லாமல் வாழ்ந்தால் காமுகர்களின் தொல்லை பெரும் தொல்லையாகும். இதனால் இறைவனிடம் வேண்டி தனது உருவத்தை பேயாக மாற்றிக் கொண்டார். அதனால்தான் அவர் திருவாலங்காட்டு பேய் என்று அழைக்கப்பட்டார்.
எனவேதான் சங்கீதத்தின் வெற்றிக்கு கணவன் பாத்திரமே இரும்புத்தூணக அமைய வேண்டியிருக்கிறது.
காமுகர் உலகில் தமிழ்நாடு காரைக்காலில் பிறந்த புனிதவதியாரான இறைவன் அருள் பெற்ற காரைக்கால் அம்மையாரே பேயாக மாறித்தான் சங்கீதமிசைக்க வேண்டியிருந்திருக்கிறது. இது ஆறாம் நூற்றாண்டு தமிழக நிலை.
தமிழில் அற நூல்களை பாடிய ஒளவையார் கூட ஓர் வயதான மூதாட்டியாராகவே அறிமுகப்படுத்தப்படுகிறார். அவருடைய கணவன் யார், இளமைக்கால வாழ்க்கை என்னவென்பது தெரியவில்லை. மூன்று அவ்வையார்கள் வாழ்ந்துள்ளார்கள் ஒருவருக்குமே கணவன் இருந்ததாக தெரியவில்லை. அனைவரும் மூதாட்டிகளே.. இது காரைக்கர் அம்மையாருக்கிருந்த துன்பத்தின் தொடர்கதையாகவே இருக்கிறது.
இந்தப் போராட்டத்தை சங்கீத இசையரசியான எம்.எஸ்.சுப்புலட்சுமியும் சந்தித்தார்.
அன்று அவரை பணம் படைத்த வக்கீல் ஒருவருக்கு மண முடிக்க நினைத்தனர் குடும்பத்தினர். ஆனால் அவரோ ஏழையான பத்திரிகை நிருபர் சதாசிவத்தையே காதலித்தார்.
காரணம்தான் என்ன..?
அக்காலத்தே மிருதங்க வித்துவான்கள்கூட பெண்களுக்கு பக்கவாத்தியம் இசைப்பது தமக்கு கௌரவக்குறைவென்று கருதினர். இது காரைக்கால் அம்மையார் காலத்தில் நடந்ததல்ல இருபதாம் நூற்றாண்டு அவலம். இதனால் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை நிகழ்ச்சிக்கு வாசிக்க வந்த மிருதங்க வித்துவான் ஒருவர் ஒரு பெண்ணுக்கு பக்கவாத்தியமிசைப்பதா என்று ஓட்டமெடுத்துவிட்டார்.
அதுதான் எம்.எஸ். சுப்புலட்சுமியை சிந்திக்க வைத்த பெரும் தருணமாகும்.
பெண் என்பதால் அவமதிக்கப்பட்டு கவலையாக இருந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியை தேற்றி பம்பாய் அழைத்து சென்று வேறொரு தமிழ் மிருதங்க வித்துவானை வாசிக்கச் சொல்லி கச்சேரியை சிறப்பாக நடத்த உதவியவரே சதாசிவம்தான்.
இவர்கள் இருவரும் பம்பாயில் இருந்து ரயில்வண்டியில் வரும்போதுதான் காதல் மலர்ந்தது. தன்னைவிட 14 வயது மூத்தவராக இருந்தாலும், தன் இசையை தன்னைவிட உயர்வாக காதலித்த சதாசிவத்தை அவர் நேசிக்கவும் அதுவே காரணம்.
காரைக்கால் அம்மையாரிடமிருந்து ஓட்டமெடுத்த தனதத்தன் போல ஓடாமல், தனக்காக பம்பாய்வரை வந்த சதாசிவமே தனக்கு பொருத்தமானவர் என்று கருதினார். அதற்காக சதாசிவத்திடம் இருந்த மற்றைய குறைபாடுகளை அவர் பெரிதுபடுத்தவில்லை.
ஆனால் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குடும்பத்தினரோ அவரை மண முடிப்பதை விரும்பாது பலவந்தமாக ரயில் வண்டியில் ஏற்றி அவரை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று திருமணம் முடிக்க திட்டமிட்ட வேளை, ரயில் வண்டியின் பயணத்தின் இடையில் தப்பியோடி சதாசிவத்துடன் பயணித்தார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.
ரயில் பயணத்தின் முடிவாய் அவன் வந்தான்
உயிர் பயணத்தின் முடிவாய் அவன் நின்றான்…
அவர்கள் இருவரும்
ஜட்கா வண்டி எனப்படும் குதிரை வண்டியில் சென்று சதாசிவம் ஐயர் வீட்டில் இறங்கியபோது அங்கே அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
சதாசிவ ஐயரின் முதல் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் அங்கே இருந்தார்கள். இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு அங்கே போயிருந்தார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.
ஒரு தாரத்துடன் இருந்து இசை காரணமாக அவளை விட்டு ஓடி இன்னொரு தாரத்துடன் வந்த தனதத்தனா.. இல்லை இன்னொரு தாரத்துடன் தன்னிடம் வந்த சதாசிவமா யார் உயர்ந்தவர் என்று எம்.எஸ் சுப்புலட்சுமியின் மனம் பட்டிமன்றம் நடத்தியது. ஈற்றில் சதாசிவமே உயர்ந்தவர் என்ற முடிவுக்கும் வந்தார்.
இரண்டாம் தாரமாக கணவன் வீடு போனவர் அங்கிருந்த பிள்ளைகளை தன் பிள்ளைகளாக ஏற்று சக்களத்தி சண்டையில்லாமல் வாழ்ந்து காட்டினார்.
உடல் இன்பம் வேறு சங்கீத கலை இன்பம் வேறென்று தன் வாழ்வால் அவர் உலகிற்கு புரிய வைத்தார். அதற்குப் பின்னர் எம்.எஸ்.சுப்புலட்சுமி என்பவர் உலகப்புகழ் பெற்ற பாடகியாக வர, மீரா என்ற திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய நடிகையாக வர பின்னால் இருந்து உயிர் கொடுத்தவரே சதாசிவம்தான்.
எனவே பாடகிகளை மணமுடிக்கும் கணவனின் பாத்திரம் என்பது லௌகீக வாழ்வென்பது வேறு கலை வாழ்வென்பது வேறு என்பதை உணர்ந்தாக இருக்க வேண்டும். லௌகீக வாழ்வுக்காக கலை வாழ்வை அழித்தலாகாது. அதுபோல கலை வாழ்வுக்காக சாதாரண வாழ்க்கையை அழித்தலாகாது என்பதை இந்த தம்பதியர் மூலமாக இறைவன் எடுத்துக் காட்டினார்.
சமூகம் என்பது மாற்றமடைய அன்று 1500 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்ததை இந்த இரண்டு இசை லெஜண்ட்டுகளின் வாழ்க்கைகளில் காண்கிறோம்.
அன்றைய தினம் சதாசிவத்தை கணவனாக ஏற்ற போது தனது இசையென்னும் அபாரா சக்தி காரணமாக தன்னை விட்டு ஓடிப்போகாத ஒருவனையே தேர்வு செய்ய வேண்டும் என்று எம்.எஸ்.சுப்புலட்சுமி கருதினார்.
காரணம் தமிழில் வரும் முதலாவது விவாகரத்து காரைக்கால் அம்மையார் தனதத்தன் திருமண முறிவுதான். அதை சேக்கிழார் பாடும்போது மயிலை காளைக்கு மணமுடித்து வைத்தார் என்று பாடுகிறார்.
மயிலும் காளையும் மண முடித்து வாழ முடியாது. சங்கீத இசையரசியும் ஒரு வக்கீலும் சேர்ந்து வாழ முடியாது என்று அவர் முடிவெடுக்க அவருக்கு பெரிய புராணம் வழிகாட்டியது.
அதற்காக இசை அரசிக்கு கணவனாக வரும் ஒருவர் இரண்டு தாரம் முடித்திருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல. அது சதாசிவத்தின் தவறு அதை எம்.எஸ் பொறுத்துக் கொண்டு அமைதி கண்டார். தனதத்தன் போல இசையையும் இல்லறத்தையும் குழப்பியடிக்கக் கூடாது. சதாசிவம் போல இரண்டு தாரம் இருந்தாலும் இசையை இல்லறத்தால் அழிக்காத பாத்திரமாக இருக்க வேண்டும் என்ற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை உணர்த்துகிறது.
இன்று புலம் பெயர் நாடுகளில் வீட்டுக்கு ஒரு சங்கீதம் கற்ற இசையரசியும், சிகாமிபோல பரதம் கற்ற நடனத்தாரகையும் இந்த நாட்டில் இருக்கிறார்கள்.
ஆகவே இந்த விடயங்களை ஒப்பீடு செய்து சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்து கலையை காப்பாற்ற வேண்டும்.
அதனால்தான் இரண்டு இசையரசிகளான காரைக்கால் அம்மையாரையும் எம்.எஸ். சுப்புலட்சுமிiயும் ஒப்பீடு செய்து, அவர்கள் இருவரின் கணவன்மாரின் பாத்திரங்களையும் இந்த அரங்கில் நின்று உங்கள் முன் ஒப்பீடு செய்து பார்க்கிறேன்.
மனைவியின் கலையை கண்போல காத்து வளர்ப்பதே இல்லற வாழ்வின் வெற்றி என்பதை ஒவ்வொரு கணவனும் புரிதல் வேண்டுமெனக் கூறினார்.
இதுபோல இசை மேதைகளான ஆண்களின் மனைவிகள் பாத்திரங்களில் ஒருவரான யாழ்பாடியின் மனைவி தொடங்கி கலைஞனான பாரதியின் செல்லம்மா வரையான பெண் ஆயிரமாண்டு கால பெண்களின் மனைவி பாத்திரங்களின் வளர்ச்சியையும் எடுத்து விளக்கினார்.
கலைஞர்களின் மனைவிகளாக இருந்த பெண்களின் ஆயிரம் வருட பாத்திர வளர்ச்சி அடுத்த வாரம்..
அலைகள் 05.11.2018 திங்கள்.