புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை (07) இரவு கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் உம்ரா கடமையை நிறைவேற்ற, புனித மக்காவை நோக்கி புறப்பட்டுச் செல்ல முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
தற்போது அரசியல் நெருக்கடி தோன்றியுள்ள நிலையில் இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதுமாத்திரமல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பவர்கள், இப்படியான கீழ்த்தரமான செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொண்டு, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் சட்டபூர்வமாக கட்சித் தலைவர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்து தீர்மானம் எடுப்பதாயின் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், கட்சிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு சுமூகமாக தீர்வுகாண முடியாது. உரிய முறையில் நம்பகத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் ஊடாகவே சரியான தீர்வை காணலாம்.
புதிய ஆட்சி மாற்றத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே கட்சி தொடர்ந்து இருந்துவருகிறது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முன்னைய சந்தர்ப்பங்களில் இருந்துள்ள காரணத்தினால், அவருடன் மீண்டும் ஒத்துழைக்க வேண்டும் என கூறுவது நியாயமாகாது. அது எமது கட்சிக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனை எங்களால் செய்ய முடியாது.
அத்துடன் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கட்சித் தலைவரின் அனுமதியின்றி, வேறு எவருடனும் கூட்டுச் சேர்வதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றார்.