குழப்பமான அரசியல் சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சிந்தித்து செயற்படவேண்டும் என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழக கட்சியின் தலைவருமான அனந்தி சசிதரன் நேற்று தெரிவித்தார்.
யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை தீர்மானிப்பதுடன் கடும் நிபந்தனையுடனேயே ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரவு வழங்கியதாலேயே மூன்றரை ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டோம். இனியும் இவ்வாறு ஏமாற்றமடைய முடியாது என்பதால் நிபந்தனையுடனான ஆதரவை வழங்குவது தொடர்பில் கூட்டமைப்பு சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. காணிகள் விடுவிப்பு, கைதிகளின் விடுதலை என அனைத்துக்கும் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் போராட வேண்டிய நிலை உருவானது. இதனாலேயே சர்வதேசத்தின் தலையீட்டுடன் எம்மக்களுக்கான பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாம் கொண்டிருந்தோம்.
இன்றைய நிலையில் கூட்டமைப்பு எவ்வாறு செயற்படுகிறது என்பதில் சம்பந்தனின் சாணக்கியமும், இராஜதந்திரமும் வெளிப்படப் போகிறது என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.