பாராளுமன்றத்தை குழப்ப சபாநாயகர் முயற்சித்து வருகின்றார். அவரின் நடவடிக்கைகள் பாராளுமன்ற சம்பிரதாயம், நிலையியற் கட்டளை மற்றும் அரசியலமைப்புக்கு முரணாகவே இருக்கின்றன. அத்துடன் 14ஆம் திகதி பிரதமர் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என சிவில் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், மாறாக அன்றையதினம் பெரும்பான்மை தொடர்பான வாக்கெடுப்பு நடத்துமாறு சபாநாயகரால் தெரிவிக்கப்டுமாக இருந்தால் அது சட்டவிரோத செயலாகும்.
அவ்வாறு வாக்கெடுப்பு இடம்பெற்றாலும் அது செல்லுபடியற்றதாகவே கருதப்படும்.
ஆனால் அன்றையதினம் இவர்கள் விரும்பினால் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவந்து அதனை சமர்ப்பிக்கலாம்.
குறித்த பிரேரணை ஒழுங்கு பத்திரத்தில் உள்வாங்கப்பட்டு 5 அல்லது 6தினங்களில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.