அமெரிக்க இடைத் தேர்தல் முடிவுகளை அடுத்து நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பின்போது ட்ரம்ப் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிஎன்என் செய்தியாளரின் பத்திரிகையாளருக்கான அனுமதி அட்டை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
வெள்ளை மாளிகை பெண் உதவியாளரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் வெளிட்ட வீடியோ திருத்தப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
என்ன நடந்தது?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடைத் தேர்தல் முடிவுகளை அடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சிஎன்என் செய்தியாளர் அகோஸ்டா, லத்தீன் அமெரிக்காவில் இருந்து தெற்கு அமெரிக்க எல்லைக்கு இடம்பெயரும் அகதிகள் குறித்துக் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து மற்றொரு கேள்வியைக் கேட்ட அகோஸ்டாவிடம், ”இத்தோடு போதும்” என்று ட்ரம்ப் இடைமறித்தார்.
உடனே வெள்ளை மாளிகையில் இருந்த பெண் உதவியாளர் அகோஸ்டாவிடம் இருந்து மைக்கைப் பறிக்க முயன்றார். ஆனால் மைக்கைத் தராமல் அவரைத் தடுத்தார் அகோஸ்டா. அப்போது அகோஸ்டாவின் கை, பெண்ணின் முழங்கையில் பட்டது. அப்போது, ”என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் மேம்” என்று தெரிவித்தார் அகோஸ்டா.
இதைத் தொடர்ந்து அகோஸ்டாவின் பத்திரிகையாளர் அனுமதி அட்டை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ”இளம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட மூர்க்கத்தனமான அவமதிப்பு இது” என்று தெரிவித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டார். அந்த 15 விநாடி வீடியோ திருத்தப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக 15 வருடங்களாக எடிட்டிங் செய்துவரும் ரஃபேல் ஷிமுனோவ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”வீடியோவின் வேகத்தைக் கூட்டி, அகோஸ்டாவின் கை வேண்டுமென்றே பெண் உதவியாளரின் முழங்கை மீது படுமாறு காட்டப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.