இலங்கை தமிழர்களின் முதுகில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா மீண்டும் குத்திவிட்டார் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் அதிகார சதுரங்கப் போட்டியில் தமிழ் இனப் படுகொலை நடத்திய மகிந்த ராஜபக்சேவின் தமிழர் ரத்தம் தோய்ந்த கரங்களில் இலங்கையின் முழு அதிகாரத்தையும் மீண்டும் வழங்குவதற்கு இன்றைய அதிபர் மைத்திரிபால சிறிசேனா திட்டமிட்டு சதி நாடகத்தை நிறைவேற்றிவிட்டார்.
2015 ஆம் ஆண்டு ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு முழுமையான நீதி வழங்க வழிகாட்டாவிடினும், வழிகாட்டாத நீர்த்துப்போன தீர்மானமாக இருந்தாலும்கூட உலக நாடுகளை ஏமாற்றுவதற்கு இலங்கையில் அரசியல் சட்ட மாற்றம் கொண்டுவரப்படும் என்றும், காணாமல்போன தமிழர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போர்க்காலம் குறித்த நீதி விசாரணையில் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்தவர்கள்கூட பங்கேற்கலாம் என்றும் ஒப்புக்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் அதிபர் சிறிசேனா குப்பைத் தொட்டியில் எறிந்தார். அத்தீர்மானத்தின் ஒரு வாசகத்தைக்கூட நிறைவேற்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதிபர் சிறிசேனா கூறியதையே பிரதமர் பொறுப்பில் இருந்த ரணில் விக்ரமசிங்கேயும் கூறினார்.
மனிதகுல வரலாற்றில் கொடூரமாக அர்மீனியாவிலும், ஜெர்மனியிலும் நடைபெற்ற இனப்படுகொலைகளைவிட மிகக் குரூரமான ஈழத் தமிழ் இனப்படுகொலையை அதிபர் பொறுப்பில் இருந்த மகிந்த ராஜபக்சே இந்தியா உள்ளிட்ட அணு ஆயுத வல்லரசுகளின் ஆயுத உதவியுடன் செய்து முடித்தார்.
ஈழத்தமிழர்களின் குழந்தைகள், வயோதிகர்கள், கர்ப்பிணிப் பெண்கள் எவரும் இப்படுகொலையில் தப்பவில்லை. 9 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற அப்படுகொலையில் இசைப்பிரியா உள்ளிட்ட தமிழ்ப் பெண்கள் சொற்களால் விவரிக்க முடியாத அளவுக்கு சிங்கள இராணுவத்தால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். ஈழத்தமிழர்களின் ஒரே பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் களத்தில் தோற்கடிக்கப்பட்டனர். உணவின்றி, காயங்களுக்கு மருந்தின்றி மடிந்த தமிழர்கள் ஏராளம்.
தமிழ்நாட்டின் முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் இனக்கொலையைத் தடுப்பதற்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் மரத்துப்போன மனசாட்சியைத் தட்டுவதற்காக நெருப்பின் தீ நாக்குகளுக்கு தங்கள் உயிர்களைத் தாரைவார்த்தனர்.
ஐநாவின் அன்றைய பொதுச்செயலாளர் பான் கீ மூன் அமைத்த மார்சுகி தாருஸ்மென் தலைமையிலான மூவர் குழு, யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் உட்பட ஒரு லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் ஐநா சபை தடை செய்த ஆயுதங்களால், விமான குண்டு வீச்சால், பீரங்கி செல்லடி தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டனர் என்று தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டது.
ஐநா சபையின் குழு அறிக்கையை மனித உரிமைகள் கவுன்சிலும் கண்டுகொள்ளவில்லை, ஐநா சபையும் மேல் நடவடிக்கைக்கு எதுவும் செய்யவில்லை. ராஜபக்சே நடத்திய இனப்படுகொலையை உடனிருந்து செயல்படுத்திய அன்றைய பாதுகாப்பு அமைச்சர்தான் இன்றைய அதிபர் மைத்திரி சிறிசேனா ஆவார்.
2019 மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. 2015 தீர்மானத்தைச் செயல்படுத்துவதாகக் கூறி, இரண்டு ஆண்டுகளாக கால அவகாசம் கேட்டு ஒத்திப்போட்டு வந்த அதிபர் சிறிசேனாவும், மகிந்த ராஜபக்சேவும் கரம் கோர்த்துக்கொண்டு இனப்படுகொலையை நடத்தியதைப் போல இப்பொழுது ஜனநாயகப் படுகொலையும் நடத்திவிட்டார்கள்.
அதிரடியாக ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்த அதிபர் சிறிசேனா, பிரதமராக கொலைபாவி ராஜபக்சேவை நியமித்தார். இலங்கை அரசியல் சட்டத்தின் 19 ஆவது பிரிவின்படி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பிரதமர் பெற்றிருக்க வேண்டும் என்பதால் தானே பிரதமராக நீடிப்பதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை ராஜபக்சேவும் நாடினார். ஆனால் கூட்டமைப்பு ஆதரவு தர மறுத்துவிட்டது. குறுக்கு வழியில் எம்பிகள் ஆதரவைப் பெற முயன்ற ராஜபக்சே, அது முடியாமல் போனதால் பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை தன்னிடம் இல்லை என்று அதிபர் சிறிசேனாவிடம் கூறியவுடன், நவம்பர் 9 ஆம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டதாக அதிபர் சிறிசேனா அறிவித்தும் விட்டார்.
இலங்கையில் உள்ள நீதிமன்றத்திலும் நீதி கிடைக்காது என்று ரணில் விக்கிரம சிங்கேவும் நீதிமன்றத்தை அணுகத் தயாராக இல்லை என்று தெரிகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் தமிழக மீனவர்களின் வாழ்வை நிர்மூலமாக்கும் கடல் தொழில் பாதுகாப்புச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற ஐநாவின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை அதிபர் சிறிசேனா, இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று திமிராகப் பேசினார். இதற்கு மறுப்புத் தெரிவிக்கவோ, கண்டிக்கவோ இந்தியா உட்பட எந்த நாடும் முன்வரவில்லை.
தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், ஈழத்தமிழர்களும், உலகத் தமிழர்களும் ஒரு உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டுகிறேன். சிறிசேனா அதிபராகவும், ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகவும் இருந்துவந்த அண்மைக் காலத்திலும் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கவோ, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கவோ, நடைபெற்ற இனப்படுகொலையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவோ எந்த ஒரு நகர்வும் நடைபெறவில்லை.
2019 ஜனவரி 5 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று இலங்கை அதிபர் அறிவித்துள்ளார். சிங்களப் பேரினவாதத்தின் உச்சகட்ட அராஜகம் மீண்டும் அரங்கேறப் போகிறது. ஈழத் தமிழ் இனத்தையே கருவறுக்க வேண்டும் என்று படுகொலை நடத்திய ராஜபக்சேவை சிங்கள இனவாத வெறியர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.
மகிந்த ராஜபக்சேயின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே அடுத்து நான் அதிபராவேன் என்றும் கூறியிருக்கிறார். ராஜபக்சே கூட்டத்துக்குப் பெரும்பான்மை கிடைத்தால் அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்து மகிந்த ராஜபக்சே மீண்டும் அதிபராகவும் வாய்ப்பு ஏற்படலாம்.
1948-லிருந்து 18 ஆண்டுகள் அறவழியில் தமிழர்களுக்காகப் போராடிய தந்தை செல்வா சிங்களவர்களோடு சகவாழ்வுக்கு இனி சாத்தியமே இல்லை என்று 1976 மே 14 இல் வட்டக்கோட்டையில் நிறைவேற்றிய சுதந்திர இறையாண்மையுள்ள தமிழ் ஈழ நாடு என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தனை பிரச்சினைகளையும் உள்ளடக்கிய அந்தத் தீர்மானத்தை தமிழகத்தில் உள்ள இளைய தலைமுறையினரும், மாணவர்களும், உலக நாடுகளில் உள்ள தமிழர்களும் கூகுளில், வலைதளத்தில் கண்டு முழுமையாக வாசித்தாலே சுதந்திரத் தமிழ் ஈழத்தின் அவசியத்தை உணர்ந்துகொள்ளலாம்.
தந்தை செல்வா தொலைநோக்கோடு கூறியவாறு பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் உலகம் இதுவரை கண்டும், கேட்டிராத வகையில் முப்படைகளை அமைத்து தமிழர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை அமைதியும் வளமும் நிறைந்த பகுதியாக மாற்றினர்.
யானையிறவு உள்ளிட்ட பல போர் முனைகளில் தங்களைவிட பல மடங்கு பலம் வாய்ந்த சிங்களப் படைகளை தோற்கடித்து உலகத்தைத் திகைக்க வைத்தனர்.
அணு ஆயுத வல்லரசுகளின் ஆயுத பலத்தால் சிங்கள அதிபர் ராஜபக்சே களத்தில் புலிகளைத் தோற்கடித்து, ஈழத் தமிழ் இனத்தையும் படுகொலை செய்தார்.
இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு ஒருகாலும் நீதி கிடைக்காது. மகிந்த ராஜபக்சே கரங்களுக்கு மீண்டும் அதிகாரம் வருமானால், முதல் கட்டமாக ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தனித்தன்மையை அழிக்க கட்டமைத்த கலாச்சாரப் படுகொலையை நடைபெறும். தற்போது தமிழர் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் சிங்கள ராணுவத்தை மேலும் அதிக அளவில் நிலைப்படுத்துவார்கள். சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் தாயகத்தில் அதிகமாகும். வடக்கு – கிழக்கு இணைப்புக்கு வழியில்லாமல் செய்ய ஏராளமான சிங்களக் குடியேற்றங்களை மேலும் அதிகப்படுத்தும் நிலை ஏற்படும்.
1987 இல் போடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நாம் ஒருபோதும் ஆதரித்தது இல்லை. ஈழத் தமிழ் இனத்துக்குச் செய்யப்பட்ட துரோகம்தான் அந்த ஒப்பந்தம். எனினும் அந்த ஒப்பந்தத்தின்படி வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான வாய்ப்பே இனி கிடையாது என்று சிங்கள அரசு கூறியபோதும், இந்திய அரசு இதுவரை அதைப்பற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை.
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் மாகாணசபையில் கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, சிங்கள ராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களையும் வெளியேற்றவும், சிறையில் இருக்கும் தமிழர்களை விடுதலை செய்யவும், இனக்கொலைக் குற்றவாளிகளை அனைத்துலக நீதிமன்றத்தில் கூண்டியில் நிறுத்துவதற்கான நீதிப் பொறிமுறை அமைக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவும் தாய்த் தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள மானத் தமிழர்கள் தமிழ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். உலக நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஐநா சபையிலும், மனித உரிமைக் கவுன்சிலிலும் குரல்கொடுக்க வேண்டும்.
சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான் ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வாகும் என்பதனை மனதில் நிறுத்தி, தமிழ் ஈழ விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள், தங்கள் உயிர்களைக் கொடையாகத் தந்தவர்கள், படுகொலைக்கு ஆளான தமிழர்களையும் நெஞ்சில் நிறுத்தி சூளுரை மேற்கொள்வோம்” என வைகோ தெரிவித்துள்ளார்.