இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அப்பட்டமான ஜனநாயக படுகொலை என பா. ம. க.வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,
‘ இலங்கை பாராளுமன்றத்தை வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கலைத்த அந்நாட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன புதிய பாராளுமன்றத்தை அமைக்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருக்கிறார்.
2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில், இலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி திடீரென கலைத்திருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையாகும். இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அந்நாட்டின் உள்விவகாரம் தான் என்றாலும் கூட, அதில் இந்தியாவின் பாதுகாப்பும், இலங்கை தமிழர் நலன்களும் அடங்கியிருப்பதால் இந்த விவகாரத்தில் எங்களுக்கு சம்பந்தமில்லை என கூறி இந்திய அரசு கடந்து செல்ல முடியாது.
ரணில் விக்கிரமசிங்கவை இலங்கை ஜனாதிபதி எந்தக் காரணமும் இல்லாமல் தான் பதவியிலிருந்து நீக்கம் செய்தார். அதேபோல், பிரதமர் பதவியை வகிப்பதற்கு தேவையான எந்த பெரும்பான்மையும் இல்லாத நிலையில் தான் ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.
பாராளுமன்றத்தில் ராஜபக்ஷ அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக எந்தெந்த வகைகளில் எல்லாம் சட்டத்தை வளைக்க முடியுமோ அந்தந்த வகைகளில் எல்லாம் சட்டங்கள் வளைக்கப்பட்டன.
இலங்கை பாராளுமன்றத்தையே முடக்கும் அளவுக்கு ஜனாதிபதி சிறிசேன சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சர்வாதிகாரியாக செயற்பட்டார். எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர்.
இலங்கைப் போர் முடிந்து பத்தாண்டுகள் ஆகும் நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை இதுவரை விடுவிக்காத ஆட்சியாளர்கள், இப்போது தமிழ் கைதிகளை விடுதலை செய்வதாகக் கூறி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பெற முயற்சிகள் செய்தனர். ஆனால், எந்த முயற்சியும் வெற்றி பெறாத நிலையில், பாராளுமன்றத்தில் தோல்வியை தவிர்ப்பதற்காகத் தான் பாராளுமன்றத்தையே கலைக்க ஜனாதிபதி சிறிசேன ஆணையிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி சிறிசேன அவரது சொந்த செல்வாக்கில் வெற்றி பெறவில்லை. 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ராஜபக்ஷவுக்கு எதிரான தமிழர்களின் வாக்குகளால் தான் ஜனாதிபதி தேர்தலில் அவரால் வெற்றி பெற முடிந்தது. தமிழர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற சிறிசேன தமது பழைய இனப்படுகொலை கூட்டாளியுடன் அணி சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது நியாயமல்ல. ஜனவரி 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் நிச்சயமாக நேர்மையாக நடக்காது.
தமிழர்களையும், ராஜபக்ஷவுக்கு எதிரானவர்களையும் மிரட்டியும், முறைகேடுகள் செய்தும் தேர்தலில் வெற்றி பெற சிறிசேன – ராஜபக்ஷ கூட்டணி முயலும். அவ்வாறு நடந்தால் இலங்கை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும், இந்தியாவுக்கு எதிரான செயல்களும் தீவிரமடையும்.
இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சீனாவுக்கு தாரைவார்க்கப்படலாம்.
அவை இந்தியாவின் பாதுகாப்புக்கு நிரந்தர ஆபத்தை ஏற்படுத்தும். இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து விக்கிரமசிங்க நீக்கப்பட்டு ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட போதே இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட்டிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்திருக்காது. இந்த விடயத்தில் இந்தியா இனியும் அலட்சியம் காட்டாமல், இலங்கை விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.’ என அவர் தெரிவித்துள்ளார்.
—————–
மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி இலங்கைத் தமிழர்களின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அதிபர் சிறிசேனா பாராளுமன்றை கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றை கலைத்து பொதுத்தேர்தலிற்கு அழைப்பு விடுத்ததையடுத்து பலரும் தங்களது கருத்துக்ளை வெளிபடுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு டுவிட்டியுள்ளார்.
அவர் தனது டுவிட்டில்
“இனியும் மோடி அரசு மௌனம் காக்காமல் தமிழர்கள் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.