சிறீலங்காவில் மகிந்த தலைமையில் ஆட்சி நீடிக்கும் வரும் பதவியையும், மற்றைய விடயங்களையும் ஒரு கை பார்த்துவிடலாமென அரசோடு இணைந்து மந்திரிகளானவர்கள்தான் இப்போது பரிதாபமான நிலையில் இருக்கிறார்கள்.
தமிழர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய வியாழேந்திரன் வியாழன் பதவிக்கு வந்து வெள்ளியே இடி விழக்கண்டு அதற்குப் பின் வாய் திறக்காமல் கிடக்கிறார்.
ஒரு நாள் மந்திரிகளில் டக்ளஸ் தேவானந்தாவும் அடங்குகிறார், மலையக மந்திரி ஒருவரும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதற்குள் மலையக தொழிலாளருக்கு ஆயிரம் சம்பள உயர்வு கேட்டு, கிடைத்ததும் அதோடு அந்தர் பல்டியடிக்கக் காத்திருந்த மலையக தலைவர் வாயிலும் மண் விழுந்துள்ளது.
சம்பள உயர்வு திட்டமிடப்பட்டது அறிந்ததும் போராட்டம் நடத்தும் கூட்டத்தில் இவரும் அடக்கம் என்பது உலகறியா இரகசியம் என்கிறார்கள் சிலர்.
இப்படி கவுண்டன் செந்தில் அரசியல் அரங்கேற..
இத்தகைய ஒரு நாள் மந்திரிகள் கொள்கைகள் ஏதுமற்ற பேர்வழிகள் என்பதையும், எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்ற கூட்டமாகவும் இருப்பதால் மக்களால் மறுபடியும் தேர்வு செய்யப்படுவார்களா என்பது கேள்விக்குறியே.
இதற்குள் மகிந்தவையும் அழைத்து பிரதமராக்கி அழகு பார்த்து விரட்டியடித்திருப்பதால் மைத்திரி அறிவாளியா மகிந்த அறிவாளியா என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த ஆட்சிக் கலைப்பு பலருடைய முகமூடிகளை கிழித்துள்ளது என்று வெளி நாடுகளில் பேசுகிறார்கள்.
——————-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (12) இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சமல் ராஜபக்ஷ தலைமை தாங்குவதாகவும் நாமல் ராஜபக்ஷவும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவதால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையை ஒருபோதும் கைவிடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
————–
நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை வைக்கக்கூடிய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே என முதியன்கஹ விகாரைக்கு பொறுப்பான தேரர் பேராசிரியர் முருந்தெனிய தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் மட்டுமே முடியும் எனவும் அவர் மேலம் தெரிவித்துள்ளார்.
—————-
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 மனுக்களும் இன்று மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இவ்வாறு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
————-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும் அமெரிக்காவின் செயற்பாட்டை பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர் சுப்ரமணிய சுவாமி விமர்சித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
“பாராளுமன்றத்தைக் கலைத்து ஒரு வருடத்துக்கு முன்னரே தேர்தலை நடத்துமாறு இலங்கை ஜனாதிபதி எடுத்திருக்கும் நடவடிக்கையை அமெரிக்கா கண்டித்துள்ளது. பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இராணுவ சர்வாதிகாரிகளுக்கு அனுமதி வழங்கி, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட தேர்தலுக்கு இடமளிக்காது பாராளுமன்றத்தை மூடியமைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியிருந்தது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
—————
சபாநாயகர் கரு ஜயசூரியவின் பாரபட்சமான அறிவிப்புக்களாலேயே பாரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.இதனால் நாட்டில் பெரும் மோதல்கள் ஏற்பட்டு பாரதூரமான நிலைமை ஏற்படும் என்பதை உணர்ந்தே பாராளுமன்றத்தைக் கலைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அரசியல் நெருக்கடியை தீர்த்துக் கொள்ளக் கூடிய மிகவும் சிறந்த ஜனநாயக ரீதியிலான நியாயமான தீர்வாக அதனை மக்களிடம் ஒப்படைத்து விட்டேனென்றும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
—————–
நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் , ஐக்கிய தேசியக் கட்சியின் எழுச்சிக்காகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்குமாறு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்கான அமைப்பின் பிரதான செயலாளர் எஸ்.ஆர். எம். விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களால் கடந்த தேர்தலில் தோக்கடிக்கப்பட்ட கொள்ளைக்காரர்களான மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியினரிற்கு நாட்டை ஜநாதிபதி ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில் பொதுமக்களாகிய நீங்கள் அமைதிகாக்க வேண்டாம்.
நாட்டின் ஜனநாயகத்தையும், ஜக்கிய தேசிய கட்யையும் பாதுகாப்பதற்காகவும் ; சிறந்த எதிர்காலத்தை நோக்கிய பயணத்திற்கு ஜக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஷவை நியமித்து நாட்டை எழுர்ச்சிப்பாதையில் கொண்டு நடாத்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வேண்டு எனவும் தெரிவித்தார்.
—————-
நிறைவேற்று அதிகாரியும் சட்டவாக்க அதிகாரியும் முரண்படும்போது அதுதொடர்பில் மக்களின் தீர்ப்பை பெறுவதே ஜனநாயக முறையாகும். அதனாலே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து மக்களின் தீர்ப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தார் என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
——————