தமிழரை காட்டு மிராண்டிகளாக காட்டும் திரைப்படங்கள் நிறுத்தப்படுமா..?

சமீபத்தில் வந்த திரைப்படங்களில் வடசென்னை என்ற திரைப்படம் வட சென்னை வாழ் மக்களை அவமதித்துவிட்டதாக கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

ஆனால் காடுகளில் வாழ்ந்த காட்டுமிராண்டிகள்கூட இது போல ஆளையாள் கொன்றது கிடையாது என்பதை வெற்றிமாறன் புரிந்து கொள்ளவில்லை என்ற வருத்தம் பலருக்கு இருக்கிறது.

வடசென்னையை தரக்குறைவாக காட்டியதல்ல.. படத்தை பார்த்தால் ஒட்டு மொத்த தமிழினமுமே காட்டுமிராண்டி கூட்டம் போன்ற தகவல் படத்தில் உள்ளது. இதை வெளிநாடுகளில் இருந்து பார்த்தாலே தெரியும்.

இப்படத்தை பார்த்த வெளிநாட்டவர் சிலர் தமிழினம் இவ்வளவு கேவலமானதா என்று கேட்டதை திரையரங்கில் கேட்க முடிந்தது.

கணவனை கொன்றவனை கொல்ல அவனுக்கே வைப்பாட்டியாக இருக்கிறாள் என்ற அபத்தமான மனிதர்கள் சிலர் இருக்கலாம்..

தினக் கொலை புரியும் அறிவற்ற கொலைஞர்கள் சிலர் இருக்கலாம்.. ஆனால் அவர்களை விட சமுதாயத்தை கணக்கில் எடுக்காத வட சென்னை போன்ற பட இயக்குனர்கள் அவர்களை அறியாமலே மிகப்பெரிய ஆபத்தை விதைத்துவிடுகிறார்.

எம்.ஜி.ஆரின் சுய ஒழுக்கம் பற்றி பல விமர்சனங்கள் இன்று வெளி வந்தாலும் அவர் திரைப்படத்தில் மோசமான கருத்துக்கள் வருவதை தடுத்திருக்கிறார்.

அதை இன்றைய இயக்குனர்கள் புரிய வேண்டும்.. சமுதாயத்தை தொடர்ந்து தங்கள் திரைப்படங்களால் தோற்கடித்து வரும் தமிழக இயக்குநர்கள் பலர் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

சுப்பிரமணியபுரம், பருத்திவீரன், சகுனி, மற்றும் பாலா, சசிகுமார் படங்களை கண்டிக்காத காரணத்தினால்தான் வடசென்னை பிறந்திருக்கிறது.

இப்போது வடசென்னை 2 வேண்டாம் என்ற கோஷம் கிளம்பியிருக்கிறது. இது குறித்த செய்தி..:

————–
’வடசென்னை’ குறிந்த கலந்துரையாடலில் இயக்குநர் வெற்றிமாறனிடம் அப்படத்தின் 2-ம் பாகம் எடுக்காதீர்கள் என்று பங்கேற்பாளர் கடும் கோபமாக பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இயக்குநர் பா.இரஞ்சித் ’கூகை திரைப்பட இயக்கம்’ ஒன்றை தொடங்கியிருக்கிறார். முழுக்க உதவி இயக்குநர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது. இதில் அவ்வப்போது திரைப்படங்கள் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்வுகள் நடைபெறும்.

இதில் ‘வடசென்னை’ குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு , திரைமொழி, காட்சியமைப்புகள், தொழில்நுட்பம் மற்றும் அரசியல் ஆகியவை குறித்து பேசினார்கள்.

அதனைத் தொடர்ந்து பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்கினார் இயக்குநர் வெற்றிமாறன். அப்போது கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒருவர், “வடசென்னை’யைப் பற்றி இவ்வளவு கேவலமாகச் சித்தரித்துக் காட்டியுள்ளீர்கள். ’வடசென்னை’ என்று சொன்னாலே ஏளனமாகவும் பயமாகவும் பார்த்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது உங்களின் ’வடசென்னை’ப் படத்தால் அது மீண்டும் வந்துவிட்டது. இரவு நேரத்தில், ’வடசென்னை’ப் பகுதிக்கு ஆட்டோக்காரர்கள் கூட வரமாட்டார்கள்.

எனவே தயவுசெய்து ’வடசென்னை’ 2 எடுக்கவே எடுக்காதீர்கள். போதும். ’வடசென்னை’ முதல் பாகத்திலேயே ஒட்டுமொத்த வடசென்னை மக்களை இப்படி அசிங்கப் படுத்திவிட்டீர்கள். தயவு செய்து கெஞ்சிக் கேட்கிறோம், ’வடசென்னை’ 2 எடுக்கவே எடுக்காதீர்கள்” என்று மிகவும் கோபமாக பேசத் தொடங்கினார். அவருடைய பேச்சுக்கு இடையே பலர் தடுத்தும், தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருந்தார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் வெற்றிமாறன், “உங்களின் உணர்வுகளைச் சொல்லியிருக்கிறீர்கள். என்னுடைய விளக்கத்தையும் கேளுங்கள். அடுத்தவர் பேசவும் அனுமதி கொடுங்கள். இப்போது, ’வடசென்னை 2’ எடுக்கமாட்டேன் என்று சொன்னால், சந்தோஷமாகிவிடுவீர்களா?

இங்கு யாராவது ’வடசென்னை’ நல்லாயிருக்கு என்று சொன்னார்களா? எல்லோரும் அவரவர் கருத்துக்களை வைக்கிறார்கள். அதுபற்றி விளக்குகிறேன். அவ்வளவுதான்” என்று அமைதியுடன் பதிலளித்திருக்கிறார் வெற்றிமாறன்.

Related posts