சென்னை விமானநிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்திய முறை தவறாக உள்ளதாக கூறியுள்ளார்.
பணமதிப்பிழப்பு நீக்கம், ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும் தமிழர்களின் விடுதலை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
கேள்விகளுக்கு பதிலளித்து தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமக்கு தெரியாது.
தற்போது தான் இது குறித்து கேள்விபடுகிறேன். இவ்விகாரம் பற்றி வேறொரு சந்தர்பத்தில் கருத்து தெரிவிக்கிறேன் என்றார்.
பணமதிப்பிழப்பு நீக்கத்தை சரியாக செயல்படுத்தவில்லை. அதை அமல்படுத்திய விதம் தவறு. அதைப்பற்றி விரிவாக பேச வேண்டியுள்ளது என கூறினார்.
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்க எடுக்கப்படும் முயற்சி பற்றி கேள்வி எழுப்பி, அந்தளவுக்கு பாஜக ஆபத்தான கட்சியா என வினவப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், பலர் பாஜகவை ஆபத்தான கட்சி என்று நினைக்கிறார்கள். பலர் அப்படி நினைத்தால், கண்டிப்பாக பாஜக அப்படிப்பட்ட கட்சியாகத்தான் இருக்கும் என்றார்.
மேலும் பேசிய அவர் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் சட்டம் இயற்றி உடனடியாக அமல்படுத்த வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார்.