போருக்கு பின்னர் சிறீலங்கா என்ற நாட்டை மறந்திருந்த மேலை நாட்டு ஊடகங்கள் இன்று மறுபடியும் சிறீலங்கா பற்றியும் சில வரிகள் எழுதியுள்ளன.
சிறீலங்காவில் மோசமான அரசியல் ஸ்திரமற்ற நிலை உருவாகியிருப்பதாக எழுதிய ஊடகங்கள், மூன்று முக்கிய கட்சிகள் ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்று சென்றிருப்பதாக தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற ஜனநாயகத்தில் பாலர் வகுப்பு வேலையை அந்த நாடு செய்திருப்பது போன்ற கவலை மிக்க தொனி செய்திகளில் காணப்படுகின்றன.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக 10 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இவ்வாறு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பிற்கு விரோதமான செயல் எனவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நிராகரிக்குமாறும் விசாரணைகளின் இறுதி முடிவுகள் வரும் வரையில் பொது தேர்தலை ஒத்தி வைக்குமாறும் உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.