சர்கார் பட பிரச்சினையின்போது அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்து ‘உங்கள் உசுரெல்லாம் தளபதி கையில்’ என்று மிரட்டல் காணொலி வெளியிட்ட ரசிகர்களை பிடிக்க தொலைபேசி எண்ணை வெளியிட்டு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. அதில் வைக்கப்பட்டிருந்த காட்சிகள், ஜெயலலிதாவின் புனைப்பெயர் சூடிய வில்லி கதாபாத்திரம் அதிமுகவினரை கோபம்கொள்ளச் செய்தது.
அரசின் திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் வேலையை செய்யும் இயக்குனர், நடிகர், தியேட்டர் உரிமையாளர்மீது சட்ட நடவடிக்கை வரும் என அமைச்சர்கள் எச்சரித்தனர். விஜய் படத்தில் சமபந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படாதவரை படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என தியேட்டர்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சர்கார் பட பேனர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. சென்னையில் அதிமுகவினர் காசி திரையரங்கம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை முழுதும் பல தியேட்டர்களில் பேனர்கள் கிழிக்கப்பட்டன. இந்நிலையில் வாட்ஸ் அப்பில், வலைதளங்களில் காணொலி ஒன்று பரவியது.
அதில் இரண்டு விஜய் ரசிகர்கள் கையில் அரிவாளுடன் மிரட்டல் தொனியில் பேசினர். ‘‘மொத்த விஜய் ரசிகர்களும் சேர்ந்தோமு வை அதிமுகவில் ஒருத்தன் உசுரோட இருக்க மாட்டீர்கள். மரியாதையா போனா போச்சுன்னு விட்டு வச்சிருக்கோம். இப்பக்கூட பண்றது மேட்டர் இல்ல. வந்து நேரா அறுத்துப்போட்டுட்டு போய்டுவேன் ஆனா எங்களால தளபதி விஜய் ரசிகர்கள் இப்படி பண்ணிட்டாங்களேன்னு விஜய்க்குத்தான் கெட்டப்பேர் வரும் என்றுத்தான் அடங்கி போகிறோம்.
இல்ல உசுரோட இருக்க மாட்டீங்க, உங்க உசுரெல்லாம் தளபதி கையில் இருக்கு. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நாளை காசித்தியேட்டர் அருகில் வருகிறேன், நீங்கள் கிழித்த பேனரெல்லாம் எடுத்து பேனர் வைப்பேன். நீங்கள் ஆண்மகனாக இருந்தால் கைவைத்து பாருங்கள்’’ என இருவரும் அரிவாளை காட்டி சவால் விடுத்திருந்தனர்.
இந்த காணொலி காட்சி வைரலானது. பொதுவெளியில் கையில் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீஸாருக்கும் புகார் போனது. இதையடுத்து போலீஸார் கடந்த ஒருவாரமாக அவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீஸார், அரிவாளுடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட 2 பேர் குறித்த விவரம் தெரிந்தவர்கள் 044-23452348, 044-23452350 ஆகிய எண்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.