சிறீலங்கா அரசியல் வெற்றி பெற்றது யார்..? மைத்திரியார் மகிமைப்புராணம்..!

ஒரு தடவை மட்டுமே அதிபர் பதவியில் இருப்பேன் என்று ரணிலின் தலையில் வெண்ணெய் தடவி, கூட இருந்த மகிந்தவுக்கே ஆப்பு வைத்து, தான் பழைய பாதுகாப்பு அமைச்சர் என்பதை பேசாது யாழ்ப்பாண தமிழரின் வாக்குகளையும் பெற்று அதிபரானவர் மைத்திரி.

இப்போது அவர் ரணிலை விரட்டி முதல் வெற்றி பெற்றார்..!

ராஜபக்ஷவுக்கு பிரதமராக தானே சத்தியப்பிரமாணம் செய்து அவரை விட தானே உயர்ந்தவன் என்பதை அவருக்கே காட்டி மகிழ்ந்தார்.!

பின்னர் பெரும்பான்மை இல்லாமையால் அவரையே விரட்டியடித்து பாராளுமன்றத்தையும் கலைத்து யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என்று விரட்டினார்..!

இனப்பிரச்சனைக்கு தீர்வு தருவேன் என்று தமிழர் கூட்டமைப்புக்கு தேன் பருக்கி, இவ்வளவு காலமும் கடத்தி இனப்பிரச்சனை தீர்வு விடயத்தை சுடுகாட்டில் போட்டார். அமைதிப்புறா சந்திரிகா அம்மையாரின் தீர்வு பொதியை விட பெரிய பொதியை சம்மந்தர் முதுகில் சுமத்தி வேடிக்கை பார்த்தார்..!

ஒரே நாளில் பதவிக்காக மாறும் பல திக்கற்ற பார்வதிகளான அரசியல் பேர்வழிகளை அடையாளம் காட்டினார். பின் அவர்கள் வந்த இடத்திற்கே திரும்பி ஓடி கேலிக்குள்ளான காட்சி கண்டு ரசித்த முகம் ஒன்று.

தமிழர் தீர்வை எழுத்தில் தாருங்கள் என்று கூட்டமைப்பு தலைவர் சம்மந்தர் மகிந்த வாசலில் நின்ற கதையை அம்பலத்திற்கு கொண்டு வந்து, தீர்வாவது புண்ணாக்காவது எதுவுமே நடக்கவில்லை என்ற உண்மையை சம்மந்தர் தேவாரத்தால் உணரச் செய்தார்.

ஒரு நாள் பதவியில் குந்திய மந்திரிகள் எல்லாம் கடந்த காலங்களில் இந்த நாட்டை எப்படி சீரழித்திருப்பார்கள் என்பதை மக்களுக்கு அம்பலப்படுத்திய முகம் ஒன்றே.

கருணா அம்மானும் சுப்பிரமணியசுவாமியும் தமது நண்பன் மகிந்த பிரதமராகிவிட்டார் என்று ஒரு நாள் மட்டும் மகிழ்வு கொள்ள வைத்து அருள் புரிந்தார்.

சுப்பிரமணிய சுவாமி உண்மையான இராஜதந்திரியா இல்லை பனம் பழம் விழும்போது வந்திருக்கும் காகம் போல சந்தர்ப்பவாத ராஜதந்திரியா என்ற கேள்விக்கு சூப்பர் பதில் காண வழி செய்தார்.

இவரைப் பயன்படுத்தி வர்த்தகம் பார்க்க புறப்பட்ட அமெரிக்கா அன் கம்பனிக்கு அல்வா கொடுத்து மகிழ்ந்தார்..

இந்தியாவின் உளவுப்பிரிவான றோ தன்னை கொல்ல முயன்றதென அவர்களுக்கு சீனி மிட்டாய் கொடுத்து சிரித்தார்.

பின்னார் நரேந்திரமோடியுடன் பேசி அவருக்கும் நண்பரானார்.

இலங்கையில் ஒரே நேரத்தில் இரண்டு பிரதமர்கள் இருக்கும் புதுமையை உருவாக்கி அருளினார்.

சீனாவும் இந்தியாவும் மோத நல்ல இடம் இலங்கை என்ற புதுமையை மொழிந்தருளினார்..!

இந்த அரசியல்வாதிகளை நம்பி இலவு காத்த கிளிகளாக இருக்கும் முட்டாள்களானோம் என்று சிங்கள வாக்காளர் தமது தலையில் தாமே செருப்பால் அடிக்க இன்னொரு வழி செய்தார்.

தமிழ் வாக்காளர் என்று எழுத எமக்கே பயமாக இருக்கிறது.. நம்மாளிடம் துரோகிப்பட்டம் இன்னமும் ஸ்டாக் இருக்கிறது.

இப்போது பல புலம் பெயர் தமிழர்களுக்கு மெல்லிய மகிழ்ச்சி சிங்களத் தலைவர்களிடையே நடைபெறும் மோதல் கண்டு..

ஆனால் ஒன்று..

இவர்களிடம் உரிமை கேட்டு போராடிய தந்தை செல்வா, ஜி.ஜி., தொடங்கி சம்மந்தர் சுமந்திரன், மாவை வரை தமிழ் தலைவர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதை உலகுக்கு எடுத்துரைத்த பெருமையும் மைத்திரியையே சாரும்.

ஊர்வலம் போன புலம் பெயர் தமிழர்..
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருந்தோர்..
படைகொண்டு போன இந்தியா..
உதவிக்கு போன உலக நாடுகள்..
வெளிநாடுகளில் உணர்ச்சியால் உச்சம் தொட்டோர்..!
சுவிசில் கூடிய மனித உரிமையாளர்..
ஐ.நா சபையினர்..
தமிழ் நாட்டு உணர்ச்சி செல்வங்கள்..

அனைவருக்கும்..

செருப்பிருந்தால் கழற்றி உங்கள் மண்டைகளில் நீங்களே அடியுங்களென அரிய பாடம் கற்பித்த மைத்திரியின் பெருமையோ பெருமை.. அம்ம..!

அப்படியானால் மைத்திரி வெற்றியாளரா..?

அவர் தனக்கும் அரசியல் எதிர்காலம் இல்லாத நிலையை ஏற்படுத்தி, ஐ.தே.க என்ற யானையின் தலையில் மண்ணைப்போட்டு, இப்போது தானும் யானைக்கட்சி என்று தவறாக நினைத்து தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டாரென்று முழங்கு சங்கே..

அனைவரும் மூடர் கூடமே என முழங்கு சங்கே என முழங்க வைத்ததே போற்றி.. மகாவம்ச கதாநாயகன் மகிந்தவுக்கே பாடம் சொன்ன முகங்கள் போற்றி..!

மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
தேவரும் துதிக்க வந்த ஈராறு
தோள்கள் போறி..
சேவலும் மயிலும் போற்றி
திருக்கை வேல் போற்றி போற்றி..

அலைகள் 14.11.2018

Related posts