உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் குரங்குகள் சேர்ந்து தாக்கியதில் 58 வயதான பெண் பரிதாபமாகப் பலியானார். கடந்த 2 நாட்களுக்கு முன் பச்சிளங் குழந்தையை குரங்கு ஒன்று கடித்துக் கொன்ற நிலையில் இது 2-வது சம்பவமாகும்.
கடந்த 2 நாட்களுக்கு முன் ஆக்ராவில் உள்ள சங்கர் காலனியில் ஒரு பெண் தனது 12 நாள் குழந்தைக்கு வீட்டின் வாசலில் அமர்ந்து பாலூட்டிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் வந்த குரங்கு ஒன்று அவரின் பச்சிளங் குழந்தையை பறித்துக் கொண்டு ஓடியது. அதன்பின் குழந்தையைக் கடித்துக் குதறி, பக்கத்து வீட்டு மாடியில் வீசிவிட்டுச் சென்றது.
இந்தச் சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் நேற்று 58 வயது பெண் ஒருவரை குரங்குக் கூட்டம் தாக்கிக் கொன்றுள்ளது. ஆக்ராவில் உள்ள தோக் மொஹல்லா பகுதியைச் சேர்ந்தவர் பூமி தேவி (வயது 58). இவர் நேற்று மாலை தனது வீட்டின் மாடிப் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த குரங்குக் கூட்டம் திடீரென அவர் மீது பாய்ந்து கடித்துள்ளது. ஒரு குரங்கு கடித்ததைப் பார்த்த மற்ற குரங்குகள் மொத்தமாகத் தாக்கியுள்ளன. இதில் பூமி தேவி படுகாயமடைந்தார்.
பூமி தேவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து குரங்குகளிடம் இருந்து அவரை மீட்டனர். அதன்பின் பூமி தேவியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அதிகமான ரத்தப்போக்கு காரணமாக பூமி தேவி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
குரங்குகளின் அட்டகாசத்தால் கடந்த 2 நாட்களில் 2 பேர் உயிரிழந்த நிலையில் அப்பகுதி மக்கள் சேர்ந்து நேற்று வனத்துறை அலுவலகத்துக்குச் சென்று குரங்குகளைப் பிடிக்கக் கோரி வலியுறுத்தினார்கள். வனத்துறையினர் கணக்கின்படி, ஏறக்குறைய ஆக்ராவில் மட்டும் 25 ஆயிரம் குரங்குகள் உள்ளன.
சமூக ஆர்வலர் முகேஷ் ஜெயின் கூறுகையில், ”கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் குரங்குகளை மலைப்பகுதியிலும், வனப்பகுதியிலும் விடக்கோரி கோரிக்கை விடுத்து வருகிறோம். அல்லது குரங்குகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யவும் கூறினோம். ஆனால், அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது.
குரங்குகள் தாக்குதலுக்குப் பயந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர மறுக்கிறார்கள். நாள்தோறும் குரங்கின் கடிக்கு சிலர் காயமடைந்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.