அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்புடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மிரா ரிகார்டெல் பதவி விலகியுள்ளார்.
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் மிரா ரிகார்டெல் நிர்வாகத்தில் வேறு ஒரு புதிய பொறுப்பில் அமரவிருப்பதாக வெள்ளை மாளிகையின் பெண் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இது குறித்து மேலும் எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.
வெள்ளை மாளிகையில் பணியாற்றும் தகுதி இனி மிரா ரிகார்டெலுக்கு இல்லை என்று மெலனியா டிரம்ப் இந்த வாரத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஆபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது இவ்விருவருக்கும் மோதல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சுற்றுப்பயணத்தின் விமான ஆசன ஏற்பாடுகள் குறித்தே மெலனியா டிரம்புக்கும் மிரா ரிகார்டெலுக்கும் இடையில் சச்சரவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடந்து அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த மெலனியா வெள்ளை மாளிகையில் இருக்கும் சிலரை தாம் நம்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.