சுகத்திற்கு வழிநடத்தும் வேதனை. மனந்திரும்புதலும் மதமாற்றமும். பாகம் 2.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
துன்மார்க்கன் தன்வழியையும், அக்கிரமக்காரன் தன்நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன். அவர் அவன்மேல் மனதுருகுவார். நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன். அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார். ஏசாயா 55:7
ஒரு காட்டூன் படத்தில் ஒரு தகப்பனார் மழையில் நனைந்தபடி மனச்சோர்வோடு தன் காரின்டயரை மாற்றிக் கொண்டிருந்தார். அவரின் இருபிள்ளைகளும் கார் ஜன்னல் வழியே பார்த்து முறுமுறுத்துக் கொண்டிருந்தனர். இக்காட:சியை தனது பிள்ளைகளுடன் தொலைக்காட்சியில் பார்த்த தகப்பனார், பிள்ளைகளிடம் உங்களுக்குத் தெரியவில்லையா? இதுதான் வாழ்க்கை. நடைபெறுவது இதுவே. வேறு சனலுக்கு மாற்றமுடியாது என்று பதில் அளித்தார். (ஒருமுறையில் விளங்க முடியாவிட்டால் இன்னுமொருதடவை வாசிக்கவும்).
இன்று தொலைக்காட்சி உண்மை நிலையைக்கூறுகிறதா? அல்லது, காலத்திற்கு ஏற்றவைகளை திரித்துக்கூறுகிறதா? உங்களின் பதில் என்ன?…
இன்றைய சூழ்நிலையில் தொலைக்காட்சியானது, எத்தகைய நடத்தையும் மனோபாவங்களும,; இன்று மனிதகுலத்திற்கு விரும்பத்தக்கது என்று கூறமுயலுகிறது. உண்மை நிலையை அறியாத விரும்பாத மக்கள், பார்க்கும் காட்சிகளுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை நடத்திச் செல்வதனால் போராட்டமான வாழ்க்கையில் இருந்து ஆறுதலை அமைதியைக்காண முடியாது தவிக்கின்றனர். அத்துடன் காணும் காட்சிகளினால் பலர் தீயவழிகளிலும், அநியாயங்களிலும், ஈவுஇரக்கமற்ற செயல்களிலும் செயற்படுகிறார்கள். (காதலிலின் விளைவால் கொலைகள், கொள்ளைகள், பழிவாங்கல்கள் இப்படிப்பலவற்றை நாம் அறிந்திருக்கிறோம்)
தேவனுடைய வார்த்தையை தியானிக்கும்போது மட்டுமே மனிதர்கள் அமைதியை ஆறுதலை, சரியான பாதையை காணமுடியும். இதனை சங்கீதம் 1:1-3 தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமா யிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
வாழ்கையின் உண்மை நிலையை நாம் அறிய வேண்டுமானால் தேவனுடைய வார்த்தையை தியானிக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையை நாம் தியானிக்கும் போது மட்டுந்தான் எமது வாழ்வில் உள்ளான மனிதனில் ஓர் மாற்றம் அல்லது, திரும்புதல் இயற்கையாக ஏற்படும். அதுவே மனந்திரும்புதல் ஆகும். இது ஒரு மதமாற்றம் அல்ல. வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொள்ளல் எனலாம். வுhழ்க்கைக்கு அடிப்படையானது உண்மை. உண்மையில்லாத வாழ்க்கை நம்முடைய ஒழுக்கத்தில் குழப்பத்தை ஏற்ப்படுத்தும். நம்முடைய வாழ்க்கையில் உண்மையில்லாவிட்டால், நாம் நன்மையான காரியங்களைத் தீமை என்று அழைப்போம். தீமையான காரியங்களை நன்மை என்று அழைப்போம். எனவே நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
சேற்றில் விழும்போது ஒரு ஆடும் ஒரு பன்றியும் ஒன்றுபோல் நடந்து கொள்வதில்லை. சேற்றில் விழுந்த ஆடு அதில் சந்தோசப்படுவதில்லை. அது வெளியேறும்வரை அலறியபடியே போராடிக்கொண்டிருக்கும். ஆனால் பன்றியோ சேற்றைத்தேடி அலைகிறது. சேற்றைக் காணும்போது திருப்தியோடு அதில் பாய்கிறது. உண்மையில் அதை வெளியே இழுக்க முயன்றால் அது அலறும்.
தேவனுடைய வார்த்தையை வாசித்து தியானிக்கும்போது குற்றவுணர்வு அடையாமல் ஒருவன் இருப்பவனனால் அவன் பன்றியைப்போல இயல்பானவன். மாறாக குற்றவுணர்வு அடைந்து பாவத்தில் இருந்து விடுதலை அடைய விரும்புகிறவன் இந்த ஆட்டைப்போல இயல்பானவன். வெளியேவர முயல்வான். அதனால்தான் வேதத்தில் மனந்திரும்புகிற மனிதனை ஓர் ஆட்டுக்கு ஒப்பிடப் பட்டிருக்கிறான். அவன் ஒருபோதும் பாவச்சேற்றில் தொடர்ந்து இருக்க விரும்ப மாட்டான்.
இந்த உண்மையை தாவீது அறிந்திருந்தான். இதனை சங்கீதம் 32:1-5 தெளிவாக கூறியுள்ளான். எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணா திருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான். நான் அடக்கி வைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
இரவும் பகலும் என்மேல் உம்முடையகை பாரமாயிருந்ததினால், என்சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.) நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என்பாவத்தை உமக்கு அறிவித்தேன்@ என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்@ தேவாPர் என்பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.
மேலே வாசித்த பகுதியிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது, தேவனிடம் நமது பாவங்களை அறிக்கையிடும்போது, அவர் மன்னிக்கவும் ஆறுதலளிக்கவும் ஆயத்தமாக இருக்கிறார் என்பதை தாவீது என்கிற அரசன் நன்கறிந்திருந்தான் என்று. நமக்கும் இதுவே உண்மையாக இருக்கிறது. ஆகவே நாமும் வேதத்தை வாசித்து தியானிப்பதின்மூலம் எமது பாவங்களை அறிக்கையிட்டு தேவனிடம் மன்னிப்பையும் ஆறுதலையும் அடைந்து கொள்வோம்.
இப்பொழுது புரிந்திருப்பீர்கள் மதமாற்றத்திற்கும் மனந்திரும்பலுக்கும் உள்ள வேறுபாட்டைக்குறித்து. ஆகவே என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை தேவனிடம் அறிக்கையிடுவோம்.
அன்பும் இரக்கமுமுள்ள நல்ல தகப்பனே, உமது குமாரனாகிய இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் எனது பாவங்களை என்னைவிட்டு நீக்கி எனக்கு பாவமன்னிப்பை தந்ததற்காக உமக்கு நன்றி அப்பா. அந்த இரட்சிப்பின் சந்தோசத்தை நான் இழந்து போகாத வண்ணம் என்னைக்காத்து, மிகுதிக்காலம் முழுக்க உமது பிள்ளையாக வாழ எனக்கு உதவி செய்து என்னைக்காத்து வழிநடத்திக் கொள்ளும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!