இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அப்பதவியி லிருந்து நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சவை புதிய பிரதம ராக அதிபர் சிறிசேனா அண்மை யில் நியமித்தார்.ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை பலத்தைப் பெற்றிருக்கும் ரணில், பிரதமர் பதவியில் இருந்து விலக மறுத்தார்.
இதனைத் தொடர்ந்து, நாடாளு மன்ற கலைப்பு, அதற்கு உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை என அடுத்தடுத்த அரசியல் நாடகங்கள் இலங்கையில் அரங் கேறின. இதன் தொடர்ச்சியாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு எதிராக நம்பிக் கையில்லா தீர்மானம் இரு தினங் களுக்கு முன்பு கொண்டு வரப் பட்டது. இதில் ராஜபக்ச தோல்வி யடைந்தார்.
ஆனால், இந்த வாக்கெடுப்பில் குளறுபடிகள் நடந்ததாக ராஜ பட்சவின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டிய நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் நம்பிக்கை யில்லா வாக்கெடுப்பு நடைபெற் றது. இதிலும் ராஜபக்சவுக்கு தோல்வியே கிடைத்தது.
இந்த நிலையில், தற்போது இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முடிவை அதிபர் சிறிசேனா ஏற்க மறுத்துள்ளார். இந்த வாக்கெடுப்பில் விதிமுறை கள் முறையாக கடைப்பிடிக்க வில்லை எனவும் சிறிசேனா குற்றம் சாட்டி உள்ளார். இதுபோன்ற சூழ்நிலை காரணமாக, இலங்கை அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
பேஸ்புக்-க்கு ரணில் கோரிக்கை
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி யான மார்க் ஜுக்கர்பர்க்குக்கு ரணில் விக்ரமசிங்கே நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘இலங்கையில் முறை கேடாக ஆட்சி அமைத்திருக்கும் ராஜபக்ச தலைமையிலான அரசிடம் எங்கள் கட்சி ஆதரவாளர்களின் விவரங்களை வெளியிட வேண்டாம்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.