கஜா புயலால் ரூ.10,000 கோடி அளவுக்கு சேதம்…

தமிழகத்தில் கஜா புயலால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதமடைந்து இருப்பதாக என தமிழக அரசு முதற்கட்டமாக கணக்கிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புயல் நிவாரணமாக முதற்கட்டமாக தமிழக அரசு ரூ.500 கோடியை விடுவிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 1,70,454 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

சாலையில் விழுந்துள்ள மரங்களை மின் ரம்பங்கள் மூலம் வெட்டி, போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டு வருகிறது.

மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ள 12,532 மின் துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து கஜா புயல் பாதிப்புக்கு நிவாரண நிதி கோருவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவர் பிரதமர், உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பாதிப்பு குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கபட்டவர்களுக்கு மத்திய அரசும், நாட்டு மக்களும் துணை நிற்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

மேலும் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts