திருமணத்துக்குப் பிறகு முதன்முதலில் ‘அகம்பாவம்’ என்ற படத்தில் நடிக்கிறார் நமிதா.
நமிதா நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ‘இளமை ஊஞ்சல்’. 2016-ம் ஆண்டு ரிலீஸானது. அதே ஆண்டு மலையாளத்தில் ரிலீஸான ‘புலி முருகன்’ படம்தான் பிற மொழிகளில் நமிதா நடித்து வெளியான படங்களில் கடைசிப் படம். அதன்பிறகு எந்தப் படமும் வெளியாகவில்லை.
அரசியலில் ஆர்வம் காட்டிய நமிதா, அதிமுகவில் உறுப்பினராக இணைந்தார். ஒருசில அதிமுக கூட்டங்களில் பங்கேற்கவும் செய்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலிலும் ஆர்வம் காட்டாமல், தொழிலதிபரான வீரேந்திர செளத்ரியைக் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார் நமிதா. சத்ரபதி ஸ்ரீ மகேஷ் இயக்கும் ‘அகம்பாவம்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். பெண் போராளிக்கும், சாதியை வைத்து அரசியல் பண்ணும் மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம்தான் இந்தப் படத்தின் கதை.
வராகி, மனோபாலா, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ‘கோலிசோடா’, ‘சண்டி வீரன்’ படங்களுக்கு இசையமைத்த அருணகிரி, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
நாளை (நவம்பர் 20) இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. பத்திரிகையாளராக நடிக்கும் நமிதா, இந்தப் படத்துக்காக 10 கிலோவுக்கு மேல் எடை குறைந்துள்ளார்.
11 வருடங்களுக்குப் பிறகு டி.ராஜேந்தர் இயக்க இருக்கும் படத்தில் வில்லியாக நடிக்கிறார் நமிதா என்று ஏற்கெனவே செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.